சந்திரயான் 3 வெற்றி - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சோனியா காந்தி வாழ்த்து!

 
sonia gandhi

சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் களமிறக்கிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி சரித்திர சாதனை படைத்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க் 3 (எல்விஎம் 3) ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் கடந்த 14-ம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது, சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து உந்துவிசை கலன், லேண்டர் ஆகஸ்ட் 17 ஆம் தேதி தனித்தனியாக பிரிந்தது. தனியாக பிரிந்த லேண்டரின் உயரம் ஒவ்வொரு கட்டமாக குறைக்கப்பட்டு நிலவை நோக்கி பயணித்தது. சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் நிலவின் தென்பகுதியில் திட்டமிட்டப்படி நேற்று மாலை 6.04 மணிக்கு தரையிறங்கியது. இதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து நிலவில் இந்தியா கால் பதித்தது. இதனிடையே விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் தரையிரங்கியது. 



 
இந்த நிலையில், நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிய இஸ்ரோ மற்றும் விஞ்ஞானிகளுக்கு சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்புள்ள ஸ்ரீ சோமநாத், நேற்று மாலை இஸ்ரோவின் மகத்தான சாதனையால் நான் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தேன் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கவே இது. இது அனைத்து இந்தியர்களுக்கும், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கும் மிகுந்த பெருமையும், உற்சாகமும் அளிக்கும் விஷயமாகும். இஸ்ரோவின் சிறப்பான திறன்கள் பல தசாப்தங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளன.  ஒட்டு மொத்த இஸ்ரோ சகோதரத்துவத்திற்கும் எனது வாழ்த்துகள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.