திரையுலகில் 30 ஆண்டுகள் : இன்று முதல் 9ம் தேதி வரை ‘ARR திரைப்பட திருவிழா’.. ரசிகர்கள் உற்சாகம்..

 
திரையுலகில் 30 ஆண்டுகள் : இன்று முதல் 9ம் தேதி வரை ‘ARR திரைப்பட  திருவிழா’.. ரசிகர்கள் உற்சாகம்..

திரையுலகில் கால் பதித்து 30 ஆண்டுகள் ஆகியுள்ளதை ஒட்டி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்  சென்னையில் பிரம்மாண்ட  இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். அத்துடன் ‘ARR திருவிழா’ என்கிற பெயரில் அவரது இசையில் வெளியான சிறந்த திரைப்படங்கள் மீண்டும் திரையிடப்பட உள்ளன.

1952ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.  முதல் படத்திலேயே ஒட்டுமொத்த இசையுலகையும் தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இவரது இசைப் பயணம், 30 ஆண்டுகளை எட்டியுள்ளது.  தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம் தெலுங்கு, ஆங்கில படங்களுக்கும் இசை அமைத்துள்ள ரஹ்மான், ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்காக 2 ஆஸ்கர் விருதை வென்றது கூடுதல் பெருமை. தனது இசைப்பயணத்தில்  கோல்டன் குளோப், பாஃப்டா , தேசியத் திரைப்பட விருதுகள் என ஏராளமான விருதுகளை குவித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

ar-rahman-23

அவரது 30 ஆண்டுகால திரையுலக இசைப்பயணத்தை கொண்டாடும் விதமாக ‘மறக்குமா நெஞ்சம்’ என்கிற தலைப்பில்  ஏ.ஆர்.ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.  ஆகஸ்ட் 12 ம் தேதி மாலை 6.30 மணி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ( ECR,சென்னை) ஆதித்யராம் அரண்மனை நகரம் ஸ்டூடியோவில் நடைபெற இருக்கிறது.  5 வருட இடைவெளிக்குப் பிறகு சென்னையில் மெகா நேரடி இசை நிகழ்ச்சியை ஏ.ஆர்.ரஹ்மான் நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ACTC  Events, Aasett மற்றும் Orchid productions ஆகியவை இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார்கள். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஏராளமான முன்னணி திரைப்பிரபலங்கள் பங்கேற்பார்கள் என தெரிகிறது. இந்த கொண்டாட்டத்திற்கு ‘ARR திருவிழா’ என்று பெயரிட்டுள்ளது. மேலும் இசை நிகழ்ச்சிக்கு முன் பல கொண்டாட்டங்களுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.  அதன்படி  இந்த ‘ARR திருவிழா’வின் ஒரு பகுதியாக  பிரபல PVR சினிமாஸ்  ஏ.ஆர்.ரஹ்மன் இசையில் வெளியான  15 முதல் 20 திரைப்படங்களை தேர்ந்தெடுத்து மீண்டும் திரையரங்கில் வெளியிட உள்ளன.  இந்த ரஹ்மான் பிலிம் ஃபெஸ்டிவல் ஆகஸ்ட் 4ம் தேதி ( இன்று ) முதல் 9ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.  

ar rahman

சென்னையில் 5 திரையரங்குகளிலும், கோவையில் 2 திரையரங்குகளிலும் திரைப்படங்கள் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், “30 வருட அன்பின் கொண்டாட்டம்!  அருகிலிருந்தும், தொலைவிலிருந்தும் உங்கள் அனைவரிடமிருந்தும் நான் பெற்ற அசாத்திய அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. இந்தப் பயணம் முழுவதும் உங்கள் கருணையும் அரவணைப்பும் என் இதயத்தைத் தொட்டன.  இன்னும் பல வருடம் நேசத்துக்குரிய நினைவுகளுடன்..” என்று குறிப்பிட்டுள்ளார்.