#Rewind2022 - அதளபாதாளத்திற்கு சென்ற பாலிவுட்!
நூறாண்டு கடந்து கொடி கட்டி பறக்கிறது இந்திய சினிமா. கோலிவுட், டோலிவுட், மோலிவுட், சாண்டல்வுட் என பல திரையுலகங்கள் இருந்தாலும், தாங்கள்தான் இந்திய சினிமாவின் அடையாளம் என்று தனி ராஜ்யம் நடத்திவந்தது, பாலிவுட் எனப்படும் ஹிந்தி சினி உலகம். இந்திய சினிமா என்றாலே, ஹிந்தி சினிமா தான் என்று கூறப்பட்ட பாலிவுட் வசூல் மற்றும் விமர்சனங்கள் வாரியாக தொடர்ந்து சறுக்கலை சந்தித்துவருகிறது.
1946-ம் ஆண்டு வெளியான நீச்சா நகர் திரைப்படம், கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வென்றது முதல், பாலிவுட்டின் பொற்காலம் தொடங்கிவிட்டது என்று சொல்லலாம். 1950-களில், பியாசா, ஆவாரா, மதுமதி உள்ளிட்ட படங்களும், 1960-களில் வெளியான முகல் இ அஷாம், தோஷ்தி உள்ளிட்ட படங்கள் இந்தியில் ஹிட் அடித்தவை. 1970-களில் அமிதாப் பச்சனின் ஷோலே திரைப்படத்திலிருந்து தொடங்கியது பாலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கலாச்சாரம் யாதோங்கி பாரத், பாபி, மிஸ்டர் இந்தியா என தொடர்ந்து கொண்டே சென்றது. பாலச்சந்தர் இயக்கிய, Ek Duuje Ke Liye திரைப்படம், கமல்ஹாசனை தென்னிந்தியா தாண்டி வடமாநிலங்களிலும் ஜொலிக்க வைத்தது.
90-களில் ஷாரூக்கான், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், சல்மான்கான் ஆகியோர் வசம் வந்தது பாலிவுட். ஷாரூக்கானின் 'தில்வாலே துல் ஹனியா லே ஜாயேங்கே' திரைப்படம், மும்பையின் மராத்தா மந்திர் திரையரங்கில் 1,274 நாட்கள் ஓடியது மட்டுமில்லாமல், வட மாநிலங்களை தாண்டி தமிழ்நாட்டில் கடைக்கோடியில் இருக்கும் நபர் வரை பாலிவுட் புகழ் ஓங்கியது. hum apke hai kon, ரங்கீலா, Khal Nayak, Kuch Kuch Hota Hai, Hum Aapke Hain Koun, ஆஷிகி, தில் சே..90-களில் வெளியான இத்திரைப்படங்கள், பாலிவுட்டையும், பாலிவுட் நட்சத்திரங்களையும், எட்டு திக்கும் கொண்டு சேர்த்தது. இதை தொடர்ந்து, 2000-த்தில் வெளியான படங்களுக்காக பாலிவுட் ரசிகர்கள் மட்டுமன்றி தென்னிந்திய ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்க தொடங்கினர்.
ஜோதா அக்பர், சத்யா, ரங் டி பசந்தி, 3 இடியட்ஸ், தேவ்தாஸ், லகான், கிரிஷ், தூம், தபாங், உள்ளிட்ட படங்களுக்கு பாலிவுட்டில் மட்டுமல்ல கோலிவுட்டிலும் ரசிகர்கள் உள்ளனர். பாலிவுட் படங்கள் தெற்கில் வெளியாகி வரவேற்பை பெற்றாலும், பஜிரங்கி பைஜான், Prem Ratan Dhan Payo, தங்கல், உள்ளிட்ட படங்கள் தென்னிந்தியாவில் ஏராளமான திரையரங்குகளில் வௌியிடப்பட்டு கோடிக்கணக்கில் வசூலையும் அள்ளின. பிரமாண்ட படைப்புகளுக்கும், தயாரிப்புகளுக்கும் பெயர் போன சஞ்சய் லீலா பன்சாலியின் பாஜிராவ் மஸ்தானி, பத்மாவதி ஆகிய படங்கள், ரன்வீர் சிங், தீபிகா படுகோன் என்ற பெயர்களை தென்கோடி வரை சுமந்து சென்றன.
காதல், ஆக்ஷன், திரில்லர், கமர்ஷியல் என கையில் எடுக்கும் கதைகள் அனைத்தும் வெற்றி பெறத் தொடங்கியதே ஹிந்தி சினிமாவை இந்திய சினிமாவாக முன்னிறுத்த காரணமாக இருந்தது. பிரமாண்ட படைப்பு, நட்சத்திர நடிகர் நடிகைகள், அதிநவீன தொழில்நுட்பம் இவை அனைத்தையும் கொண்டு வலுவாக கட்டப்பட்ட பாலிவுட் கோட்டையில், இன்று அடுத்தடுத்து வெளியாகும் திரைப்படங்கள் தோல்வியை தழுவி விரிசலை ஏற்படுத்திவருகிறது. 200 கோடி ரூபாயில் தயாரான முன்னணி கதாநாயகன் அக்ஷ்ய் குமாரின் சாம்ராட் பிரித்விராஜ் படம் 80 கோடி வசூலைக் கூட தாண்டவில்லை.
அதற்கு முன் வெளியான அக்ஷ்ய் குமாரின் பச்சன் பாண்டே படத்திற்கும் இதே நிலைதான். தயாரிப்பாளர் செய்த 165 கோடி முதலீட்டில், வெறும் 50 கோடி மட்டுமே கைக்கு கிடைத்தது. ரன்வீர் சிங்கின் ஜெயேஷ்பாய் ஜோர்தார் படமும், போடப்பட்ட 90 கோடி ரூபாய் முதலீட்டில், கால்பங்கை கூட வசூலிக்கவில்லை. அஜய் தேவ்கனின் ரன்வே-34, ஷாஹித் கபூரின் ஜெர்சி, ஜான் ஆப்ரஹாமின் அட்டாக்-பார்ட் ஒன், சயீஃப் கான அலி கானின் பன்டி அவ்ர் பப்லி-2, டைகர் ஷ்ராஃபின் ஹீரே பன்ட்டி ஆகிய படங்களை பாலிவுட் ரசிகர்கள் முற்றிலும் நிராகரித்து விட்டனர்.
கடந்த டிசம்பர் மாதம் முதல் வெளியான அக்சய் குமார், ரன்வீர் உள்ளிட்ட 7 பிரபல பாலிவுட் நடிகர்கள் நடித்து சுமார் ஆயிரத்து 100 கோடி ரூபாய் செலவில் வெளியான 10 படங்கள் தயரிப்பு செலவில் மூன்றில் ஒருபங்கு கூட வசூலிக்க முடியாமல் தோல்வியடைந்துள்ளன. அமீர்கான் நடிப்பில் வெளியான லால் சிங் சத்தா படத்திற்கும் இதே நிலைமை தான். தொடர் தோல்வியை சந்தித்து வந்த பாலிவுட்டை, அண்மையில் வெளியான பிரம்மாஸ்த்ரா திரைப்படம் தூக்கி நிறுத்தும் என இந்தி வட்டாரங்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தோல்வி பட்டியலில் பிரம்மாஸ்த்ராவும் சேர்ந்து கொண்டது. 10 வருட உழைப்பு, 410 கோடி ரூபாய் பட்ஜெட், அதி நவீன தொழில்நுட்பம், மெகா நட்சத்திரங்கள் என பிரம்மாண்டமாக உருவான பிரம்மாஸ்த்ரா, வெளியான முதல் நாளே தோல்வி படங்களின் பட்டியலில் சேர்ந்தது.
இதனால், இப்படத்தை வெளியிட்ட நிறுவனங்களுக்கு 800 கோடி ரூபாய் இழப்பை ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் பாலிவுட் சரியும் அதே சமயத்தில், மற்றொரு பக்கம் தென்னிந்திய திரைப்படங்கள் பாலிவுட் கோட்டையில் கொடி ஏற்றத் தொடங்கிவிட்டன. தென்னிந்திய நடிகர்களை வைத்தும், இந்தி நடிகர்களை வைத்தும் தமிழ் இயக்குநர்கள் இயக்கிய திரைப்படங்கள் கோலிவுட், டோலிவுட் தாண்டி பாலிவுட்டிலும் பேசப்பட்டன. பாலிவுட் மட்டுமே பயன்படுத்தி வந்த பான் இந்தியா என்ற கலாச்சாரத்தை கையில் எடுத்து இந்தியா முழுவதும் வசூலை வாரிக்கு குவித்தது பாகுபலி திரைப்படம்.
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, நாசர், தமன்னா, அனுஷ்கா உள்ளிட்ட தென்னக நடிகர்களின் பட்டாளம் சூழ வெளியான பாகுபலி, இந்தியில் மட்டும் 510 கோடி ரூபாய் வசூலித்து பாலிவுட் வட்டாரத்தையே அசர வைத்தது. பாகுபலி படத்தின் மூலம் பான் இந்தியா என்ற வெற்றியை ருசித்த ராஜமௌலி, தனது அடுத்த படமான ஆர்.ஆர்.ஆரையும் பான் இந்தியா திரைப்படமாக வெளியிட்டார். ஆர்.ஆர்.ஆர். படத்தின் மொத்த வசூலான ஆயிரத்து 200 கோடியில், 270 கோடி இந்தியில் மட்டுமே வசூலானது. இரண்டு பான் இந்தியா திரைப்படங்களை கொடுத்த டோலிவுட், மீண்டும் போட்டிக்கு தயாராகி, அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தான நடிப்பில் புஷ்பா படத்தை பான் இந்தியாவாக வெளியிட்டது. கடந்த ஆண்டு வெளியான இப்படம், உலகம் முழுவதும் 350 கோடி ரூபாய் வசூலித்தது. இந்தியில் மட்டும் 100 கோடி ரூபாயை வசூலித்தது.
பான் இந்தியா பந்தயத்தில் டோலிவுட்டுக்கு இணையாக சாண்டல்வுட்டும் படம் தயாரிக்கத் தொடங்கியது. அது தான் கே.ஜி.எஃப். இப்படத்தின் இரண்டாம் பாகம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என வெளியான மொழிகளில் எல்லாம் வசூல் வேட்டை நடத்தியது. இந்தியில் மட்டும் 550 கோடி ரூபாயை ஈட்டியது. 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி 12 மடங்கு அதிகமாக ஆயிரத்து 250 கோடி வசூலித்து சாதனை படைத்தது. பட்ஜெட்டில் பாதியை கூட வசூலிக்க முடியாமல் இந்தி படங்கள் தோல்வியை தழுவி வரும் சமயத்தில், அதே பாலிவுட் வட்டாரத்தில் புகுந்து, பட்ஜெட்டை விட 10 மடங்கு அதிகமாக வசூலித்து உச்சம் தொட்டுள்ளது தென்னிந்திய திரைப்படங்கள்.