ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய வில் ஸ்மித்..

 
ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய வில் ஸ்மித்..

தொகுப்பாளரும், நடிகருமான  கிறிஸ் ராக்கை  கன்னத்தில் அறைந்த விவகாரத்தை தொடர்ந்து,   நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்  கடந்த 28ம் தேதி 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.  அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக், பிரபல ஹாலிவுட் நடிகர் வில்  ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் பற்றி நகைச்சுவையாக பேசினார். ஜடாவுக்கு alopecia என்ற முடி உதிரும் நோய் இருக்கிறது.  ஆனால் அதை அறியாமல் அவரது ஹேர்ஸ்டைல் குறித்து கிறிஸ் ராக் கிண்டலடித்தார். இதனால் கோபமடைந்த வில் ஸ்மித் மேடைக்கே சென்று கிறிஸ் ராக்கின் கன்னத்தில்  அறைந்தார்.

will smith

 பின்னர் சிறிது நேரத்திலேயே  ’கிங் ரிச்சர்ட்’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது  வில் ஸ்மித்திற்கே அறிவிக்கப்பட்டது. அப்போது மேடையிலேயே தமது செயலுக்கு கண்ணீர்மல்க வில் ஸ்மித் மன்னிப்பு கோரினார். அதனைத் தொடர்ந்து தமது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கிறிஸ் ராக்கிடம் வில் ஸ்மித் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தார். வில் ஸ்மித் மீது விசாரணை தொடங்கிய ஆஸ்கர் அமைப்பு நடவடிக்கை எடுக்க இருந்த  நிலையில், ஆஸ்கர் அமைப்பு உறுப்பினர் பதவியில் இருந்து வில் ஸ்மித் விலகியிருக்கிறார்.

 சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர்  வில் ஸ்மித்திற்கு முதன்முறையாக கிடைத்துள்ளது.

அவர் தனது ராஜினாமா கடிதத்தில்,  ஆஸ்கர் விழாவில் தனது செயல் அதிர்ச்சியாகவும், மன்னிக்க முடியாததாகவும் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். கிறிஸ் ராக், அவரது குடும்பத்தினர், எனது நண்பர்கள், நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள், பார்வையாளார்கள் என நான் காயப்படுத்தியவர்களின் பட்டியல் மிக நீளமானது என்றும், ஆஸ்கர் அகாடமியின் நம்பிக்கைக்கு தான் துரோகம் இழைத்து விட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். தான் மனமுடைந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ள வில் ஸ்மித், அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.  மேலும் ஆஸ்கர் அமைப்பு எடுக்கும்  எந்தவொரு விளைவுகளையும் ஏற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

 

null