’கிறிஸ் ராக்கை அறைந்த வில் ஸ்மித்..’ விசாரணையை தொடங்கியது ஆஸ்கர் கமிட்டி.. ஆஸ்கர் விருது பறிக்கப்படுமா??

 
’கிறிஸ் ராக்கை அறைந்த வில் ஸ்மித்..’ விசாரணையை தொடங்கியது ஆஸ்கர் கமிட்டி.. ஆஸ்கர் விருது பறிக்கப்படுமா??

ஆஸ்கர் விழா மேடையில் தொகுப்பாளரும், நடிகருமான  கிறிஸ் ராக்கை  கன்னத்தில் அறைந்த விவகாரத்தில்  நடிகர் வில் ஸ்மித்திற்கு ஆஸ்கர் விருது குழு  கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் உலக அளவில் பேசுபொருளான இந்த பிரச்சனை தொடர்பாக  விசாரணையையும் தொடங்கியிருக்கிறது.

94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.  அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக், பிரபல ஹாலிவுட் நடிகர் வில்  ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் பற்றி நகைச்சுவையாக பேசினார். ஜடாவுக்கு alopecia என்ற முடி உதிரும் நோய் இருக்கிறது. அவரது ஹேர்ஸ்டைல் குறித்து கிறிஸ் ராக் கிண்டலடித்தார். இதனால் கோபமடைந்த வில் ஸ்மித் மேடைக்கே சென்று கிறிஸ் ராக்கின் கன்னத்தில் பளார் என அறைந்தார்.  ஆஸ்கர் விழா மேடையிலேயே வில் ஸ்மித்தின் செயல்  உலகம் முழுவதும் பேசு பொருளானது.

will-smith-and-chris-rock

பின்னர் சிறிது நேரத்திலேயே  சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் வில் ஸ்மித்திற்கே அறிவிக்கப்பட்டது. அப்போது மேடையிலேயே தமது செயலுக்கு அவர் கண்ணீர்மல்க வில் ஸ்மித் மன்னிப்பு கோரினார். அதனைத் தொடர்ந்து தமது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கிறிஸ் ராக்கிடம் வில் ஸ்மித் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். மனைவியின் மருத்துவ நிலை குறித்து கிண்டல் செய்ததை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும். ஆகையால் தான் அவ்வாறு நடந்துகொள்ள வேண்டியதாகிவிட்டது என்றும் அவர் ஆதங்கத்தை பதிவு செய்திருந்தார்.

94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா.. விருதுகளை அள்ளிய பிரபலங்கள்..

ஆனாலும் பிரச்சனை அத்துடன் முடிந்துவிடவில்லை. நேற்று சமூக வலைதளங்கள் முழுவதும் வில்ஸ் ஸ்மித் செய்தது சரி என்றும், தவறு என்று மாறி மாறி ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வந்தனர்.  மற்றொரு தரப்பினர் கிறிஸ் ராக் உருவ கேலி செய்தது தவறு எனக் கூறி வருகின்றனர். இதனையடுத்து வில் ஸ்மித்தின் செயலுக்கு  ஆஸ்கர்  விருது குழு கண்டனம் தெரிவித்திருக்கிறது. மேலும்  இது தொடர்பான விசாரணையையும் தொடங்கியுள்ளது. ஏற்கனவே தவறான  நடந்துகொள்ளுதல், தொல்லை தருதல், பாரபட்சம் காட்டுதல் போன்ற காரணங்களுக்காக ஆஸ்கர் விருதுகள் பறிக்கப்படலாம் என்கிற விதிகள் உள்ளன.  எனவே வில் ஸ்மித்தின் செயலை  காராணம் காட்டி, விருதை திருப்பப்பெற  ஆஸ்கர் விருது கமிட்டி பரிந்துரைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.