தமிழ்நாட்டுக்கு வந்தால் தமிழில்தான் பேச வேண்டும்; அதுதான் இம்மண்ணுக்கு கொடுக்கும் மரியாதை- அல்லு அர்ஜூன்
தமிழில் தான் பேச வேண்டும், ஏனெனில் அதுதான் இந்த மண்ணுக்கு நாம் கொடுக்கும் மரியாதை. எங்கு போனாலும் அந்த மண்ணுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் புஷ்பா 2 ப்ரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகர் அல்லு அர்ஜூன், “நான் பிறந்த இந்த மண்ணுக்கு அன்பான வணக்கம். தமிழ் மக்களே.. சென்னை மக்களே.. வணக்கம். மறக்க முடியாத நாள். எத்தனையோ வருடங்கள் இதற்காக எதிர்பார்த்தேன். எங்கே போனாலும் சென்னை வரும் போது அந்த ஃபீலே வேறு. உணர்வுப்பூர்வமான நெருக்கம். நான் இப்போ எப்படி இருக்கிறனோ, அது இந்த மண் கொடுத்தது. சென்னை தி.நகர் பையன் நான். மேடையில் பேசும்போது கொஞ்சம் தமிழ் மறந்து விடுவேன். ஆனால் நண்பர்கள் உடன் பேசும் போது வேறுமாதிரி.
என் ஊரில் ஒரு நிகழ்ச்சி வேண்டும் என்று 20 ஆண்டுகளாக நினைத்திருந்தேன். தமிழில் தான் பேச வேண்டும். ஏனெனில் இந்த மண்ணுக்கு நாம் கொடுக்கும் மரியாதை. எங்கு போனாலும் அந்த மண்ணுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். நான்கு வருடமாக ஒரே ஒரு பெண்ணை மட்டும் தான் பார்க்கிறேன், அது ராஷ்மிகா. முதல்முறையாக நான் ஒரு பாட்டுக்கு எச்சரிக்கையாக இருந்தேன். ‘ஸ்ரீலீலா’ ரொம்ப கடினமாக உழைக்கும் பெண். ரொம்ப க்யூட். எனது முதல் படம் நடித்த பிறகு ஒரு வருடம் படம் இல்லாமல் இருந்தேன். சுகுமார் ஆர்யா படத்துடன் வந்தார். ஆர்யா படம் இல்லை என்றால் நான் இங்கு இல்லை. எனது ரசிகர்கள் ரொம்ப அன்புடன் இருக்கிறார்கள், எனது ஆர்மி அவர்கள். எனக்கு தமிழ் ரொம்ப பிடிக்கும், எதாவது தவறாக பேசி இருந்தால் மன்னித்து விடுங்கள்” என்றார்.