மலையாள நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு!

 
மலையாள நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு!

மலையாள நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த  நீதிபதி ஹேமா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஹேமா கமிட்டியின் அறிக்கை, சில தினங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில் அதிகாரத்தில் இருக்கும் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களால் பெண் கலைஞர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  ஹேமா கமிட்டி ரிப்போர்ட் வெளியான  பின்னர் பல நடிகைகள், தங்களுக்கும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக தற்போது கூறி வருகின்றனர்.   இதனையடுத்து  பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு அமைத்துள்ளது. 

மலையாள நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு!

மலையாள முன்னணி திரைப்பிரபலங்கள் மீது இதுவரை 8 நடிகைகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். அடுத்தடுத்த புகார்களால் மலையாள சினிமாவின் முக்கிய அமைப்பான  AMMA-வின்(மலையாள திரைப்பட நடிகர் சங்கம்) தலைவர் மோகன்லால் உள்பட  16 பேர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். இதனிடையே  துணை நடிகை ரேவதி சம்பத், நடிகரும் மலையாள திரைப்பட நடிகர் சங்க பொதுச்செயலாளருமாக இருந்த  சித்திக் மீது பாலியல் புகாரளித்தார்.  இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்திருந்த சித்திக், ரேவதி சம்பத் மீது காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். 

இந்நிலையில் தற்போது மலையாள நடிகர் சித்திக் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாலியல் வன்கொடுமை பிரிவிலும், நடிகை ரேவதி சம்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரிவிலும் சித்திக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மஸ்கட் ஹோட்டலில் கடந்த 2016 ஆம் ஆண்டில் நடந்த பலாத்கார சம்பவம் தொடர்பாக ரேவதி சம்பத் அளித்த புகாரில் 8 ஆண்டுகளுக்கு பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவிடம் சில நாட்களுக்கு முன்பு ரேவதி சாம்பத் புகார் அளித்திருந்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் திருவனந்தபுரம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மலையாள நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு!

மலையாள திரை உலகில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.  தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பாதிக்கப்பட்ட நடிகைகள் நண்பர்களிடம் பேசிய உரையாடல்கள்,  குறுஞ்செய்திகள்,  மின்னஞ்சல்கள் உள்ளிட்ட தகவல்களை சேகரிக்க  சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து பாலியல் புகார்களுக்கு ஆளான நடிகர்களை விசாரிக்கவும், பாலியல் வன்கொடுமை தொடர்பாக புகார் அளித்த மலையாள நடிகைகளிடம் ரகசிய வாக்குமூலம் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.