‘விடுதலை 2 -க்காக வெயிட்டிங்.. பாராட்டிய ரஜினிகாந்த்.. சூரி நெகிழ்ச்சி..

 
 ‘விடுதலை’ படம் பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டிய ரஜினிகாந்த்..

‘விடுதலை’படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த்,  படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.  

பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடுதலை’. எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ நாவலை அடிப்படையாக கொண்டு இரண்டு பாகங்களாக  உருவாகியுள்ள இந்தப்படத்தை ,  ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ராட் குமார் தயாரித்துள்ளார். இளையராஜா இசையமைத்திருக்கிறார்.  மேலும் இந்தப்படத்தில்  விஜய்சேதுபதி,  கௌதம் மேனன், ராஜீவ்மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.   உலகம் முழுவதும் மார்ச் 31 அன்று வெளியான 'விடுதலை-1' படம்  மிகப்பெரிய வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவித்து வருகிறது.

 ‘விடுதலை’ படம் பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டிய ரஜினிகாந்த்..

விடுதலை  'ஏ' தணிக்கை சான்றிதழ் பெற்ற படமாக இருந்தாலும், ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. சூரி வழக்கமான தனது பாணியில் இருந்து முற்றிலும் விலகி,  தனது கதாபாத்திரத்திற்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறார்.   படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் வெற்றிமாறனையும், விடுதலை படக்குழுவினரையும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த், ‘விடுதலை’படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து பாராட்டியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூரியை நேரில் வரவழைத்து ரஜினி பாராட்டியிருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், “விடுதலை இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம்.  சூரியின் நடிப்பு - பிரமிப்பு. இளையராஜா - இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன்  - தமிழ்த் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள்.  இரண்டாவது பாகத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.  


இதேபோல் நடிகர் சூரி தனது ட்விட்டர் பதிவில், “இதுவரை கிடச்ச வாழ்த்துகளுக்கு சிகரமாக வந்தது தலைவர் சூப்பர் ஸ்டாரின் வாழ்த்து. யார பார்த்து பிரமிச்சு சினிமாவுக்கு வரணும்ன்னு நினச்சேனோ அவர் எங்கள் படைப்பையும் உழைப்பையும் பாராட்டி பேசிய தருணம் வாழ்க்கை முழுமை அடைஞ்சதா உணர்றேன். இறைவனுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.