சினிமா ரசிகர்களுக்கு செம ட்ரீட்! நாளை 10 படங்கள் ரிலீஸ்

நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதற்கு இடைப்பட்ட நாட்களில் சிறிய பட்ஜெட் படங்கள் அதிக அளவில் தமிழ்த் திரையுலகில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவில் நாளை ரீ-ரிலீஸ் படங்கள் உட்பட 10 படங்கள் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ்.சுகுமார் இயக்கத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம், ஸ்வீட் ஹார்ட். ரொமான்டிக் காமெடி படமான இதற்கு இசை அமைப்பதோடு தனது ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். இந்த வாரத்தில் எதிர்பார்க்கப்படும் படமாக இது உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் நாளை திரைக்கு வர உள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்க்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் படம் பெருசு. நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. குடும்ப காமெடி படமாக உருவாகியுள்ள இப்படம் நாளை திரைக்கு வருகிறது.
வழிப்பறி கும்பலை பற்றிய படமாக உருவாகியுள்ள படம் ராபர். சத்யா, டேனி, ஜெ.பி., தீபா, பாண்டியன், சென்றாயன், நிஷாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனத்தை மெட்ரோ பட இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் எழுதியுள்ளார். பாண்டி இப்படத்தை இயக்கியிருக்கிறார். தண்ணீர் சேமிப்பை மையமாகக் கொண்டு ஜெயவேல்முருகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் வருணன். சென்னையில் உள்ள வாட்டர் கேன் வியாபார அரசியலை இப்படம் பேசுகிறது.இதில், துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கேப்ரியல்லா ஜோடியாக நடித்துள்ளனர். யாக்கை பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் ராதா ரவி, சரண்ராஜ், ஷங்கர்நாக் விஜயன், ஹரிபிரியா, ஜீவா ரவி, மகேஷ்வரி மற்றும் பலர் நடித்துள்ளனர். போபோ சஷி இசையமைத்துள்ளார். ராம சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படமும் நாளை வெளியாக உள்ளது.
மேலும் தங்கப்பாண்டி இயக்கத்தில் கிராமத்து கதையை மையமாக கொண்ட படமாக உருவாகி உள்ள மாடன் கொடை விழா, கே.ரங்கராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல், குற்றம் குறை, டெக்ஸ்டர் ஆகிய படங்கள் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.மேலும் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன், ரவி மோகன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி ஆகிய படங்கள் நாளை மீண்டும் ரீ ரிலீஸ் ஆகின்றன.