காதலை கைவிடக் கூறி கண்டித்த உறவினரை காதலன் மூலம் கொலை செய்த 15 வயது காதலி

 
murder murder

மணப்பாறை அருகே தனியார் கேஸ் ஏஜென்சி ஊழியர் கொலையில் மூளையாக செயல்பட்ட 15 வயது சிறுமி காதலனுடன் சிக்கினார்.

murder


திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள காவல்காரன்பட்டியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 51). இவர் தாதக்கவுண்டம்பட்டியில் உள்ள பாரத் கேஸ் ஏஜென்சியில் வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 19-ம் தேதி இரவு வழக்கம்போல் தனது வீட்டின் முன்பு உள்ள வரண்டா பகுதியில் ஹாஸ்பிடாஸ் கூரையின் கீழ் கட்டிலில் படுத்து தூங்கியுள்ளார். அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் வீட்டினுள் தூங்கியுள்ளனர். (20 ம்தேதி) மறுநாள் காலை பால் கறப்பதற்காக அவரது மகள் தந்தையை அழைத்துள்ளார். அவரிடமிருந்து பதில் வராததால் அருகே சென்று எழுப்ப முயன்றபோது அவர் தலையில் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் படுகாயத்துடன் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். 

இச்சம்பவம் குறித்து புத்தாநத்தம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மணப்பாறை டி.எஸ்.பி., காவியா, பயிற்சி டி.எஸ்.பி., விக்னேஷ், மற்றும் புத்தாநத்தம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். கைரேகை மற்றும் தடயவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்பநாய் நிலாவும் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகள் குறித்த தடயங்கள் கிடைக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டது. சிவசுப்பிரமணியன் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 
இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய எதிரிகளை கைது செய்ய திருச்சி எஸ்.பி., செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணன் மேற்பார்வையில், மணப்பாறை டி.எஸ்.பி., காவியா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடும் பணி தொடங்கியது. முதற்கட்ட விசாரணையாக சம்பவ இடத்தின் அருகில் ஒரு வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 20 ம் தேதி அதிகாலை 1.20 மணிக்கு கையில் இரும்பு ராடுடன் உடல் தோற்றத்தை மறைத்த நிலையில் 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்து சென்றது பதிவாகியிருந்தது. சிசிடிவி காட்சியில் பதிவான எதிரியின் உயரம், முக ஒற்றுமை ஆகியவற்றின் அடிப்படையில் உருவ ஒற்றுமை செய்ததில் அவர், காவல்காரன்பட்டியை சேர்ந்த மனோகரன் மகன் ராதாகிருஷ்ணன் (வயது 22) என்பவராக இருக்கலாம் என யூகிக்கப்பட்டது. 

Murder

இவர் கொலை செய்யப்பட்ட சிவசுப்பிரமணியனின் உறவினரின் 15 வயது மகளை கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்ததாகவும், இதனையறிந்த சிவசுப்பிரமணியன் காதல் விவகாரம் தொடர்பாக, அப்பெண்ணை கண்டித்ததாகவும், இது தொடர்பான பிரச்சினை இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது காதலி ஆகியோர்களின் செல்போன் தொடர்புகளை போலீசார் சோதனை செய்தனர். சம்பவம் நடைபெறுவதற்கு முன்னும், சம்பவத்திற்கு பின்னும் இருவரும் அலைபேசி தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து பெங்களூரில் பதுங்கியிருந்த ராதாகிருஷ்ணனை செல்போன் எண் மூலம் இருப்பிடத்தை கண்டறிந்து, அவரை காவல்நிலையம் அழைத்து வந்து, விசாரணை மேற்கொண்டனர், விசாரணையில் இறந்து போன சிவசுப்பிரமணியன் தனது காதலியிடம் காதலை கைவிடுமாறு வற்புறுத்தியதால், அவர் மீது ஆத்திரமடைந்து, அவரை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் ராதாகிருஷ்ணன், கொலைக்கு தூண்டுகோலாக அவரது 15 வயது காதலி, இருந்ததும் தெரிய வந்தது. அதேபோல், ராதாகிருஷ்ணனின் தம்பி சேரன் (வயது 20) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சிவநேசசெல்வன்(19), ஆகிய இருவரும் குற்றவாளியை தப்ப வைக்கும் நோக்கில் இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்று, கொலைக்கு பயன்படுத்திய பொருட்களை பதுக்கி வைக்கவும், அவரை பேருந்தில் ஏற்றி அனுப்பவும் உதவி புரிந்துள்ளதும் தெரிந்தது. இதனையடுத்து ராதாகிருஷ்ணன், அவரது 15 வயது காதலி, தம்பி சேரன் மற்றும் சிவநேசசெல்வன் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்து, மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். காதலை கைவிடக் கூறி கண்டித்தவரை காதலன் மூலம் 15 வயது காதலி கொலை செய்த சம்பவம் மணப்பாறையை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.