தாலியை மறைத்து வாழ்ந்த சிறுமி- பிறந்தநாள் அன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்
16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைத செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து மீன்சுருட்டி அருகே உள்ள குண்டவெளி கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் வசந்தன். கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவியான 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கட்டாயப்படுத்தி குழந்தை திருமணம் செய்து கொண்டு, சிறுமியை மிரட்டி இருவரும் தனித்தனியே வசித்து வந்துள்ளனர். சிறுமியை வசந்தன் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் வைத்து சிறுமியின் பிறந்த நாளன்று கடந்த நவ 17-ந் தேதி திருமணம் செய்துள்ளார். சிறுமியிடம் வசந்தன் தாலியை மறைத்து வைக்கும்படி கூறியதால் அவர் கட்டிய தாலியை வீட்டிற்கு தெரியாமல் மறைத்து வைத்துக்கொண்டு அவரவர் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 29. ந் தேதி தாலியை எடுத்து வெளியில் போட்டுக்கொண்டு தனது வீட்டிற்கு வரும்படி வசந்தன் கூறியுள்ளார்.
இதையடுத்து சிறுமி வசந்தன் கூறியது போல் வசந்தனின் வீட்டிற்கு சென்றுள்ளார். சிறுமியின் கழுத்தில் தாலியை பார்த்த அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலர் ஜெயமங்களத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடம் சென்று நேரில் விசாரித்து உண்மையை அறிந்து கொண்ட ஜெயமங்களம் இது குறித்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி. சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த வசந்தன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது தாயார் கொளஞ்சியம்மாள் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்து வசந்தனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.