ஸ்னாப்சாட் மூலம் பழகிய கல்லூரி மாணவியை ஆபாசமாக படம் பிடித்து மிரட்டிய இளைஞர்! தட்டித்தூக்கிய போலீஸ்

 
ச்

சென்னை எர்ணாவூரில் ஸ்னாப்சாட் மூலம் பழகிய கல்லூரி மாணவியை ஆபாசமாக  படம் பிடித்து, பாலியல் இச்சைக்கு இணங்க மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

செ‌ன்னை எர்ணாவூர் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமீம் (24) என்ற இளைஞரிடம் ஸ்னாப்சாட் மூலம் அறிமுகம் ஆகியுள்ளார். இந்த நிலையில், இருவரும் நட்பாக பழகி வந்தனர். இருவரும் வீடியோ காலில் பேசும் போது, அதை தமீம் ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்து கொண்டு அதை அரை நிர்வாண படமாக சித்தரித்து  இளம்பெண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளார். தனது இச்சைக்கு இணங்க வில்லையென்றால், உன்னுடைய ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.  மேலும், தமீம் நண்பர்களுக்கும் அதை அனுப்ப போவதாகக் கூறி வந்ததால் மாணவி பயந்து தமீமிடம் கெஞ்சியுள்ளார். அவரது அச்சத்தை பயன்படுத்திக் கொண்ட தமீம், தன்னை தனிமையில் சந்திக்க வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளார். 


இது தொடர்பாக இளம்பெண் எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குற்றவாளியை பிடிக்க அந்த பெண்ணிடம், அவன் சொல்வதைக் கேட்டு எங்கே வரவழைக்கிறான் என சொல்லும்படி அறிவுறுத்தினர். போலீசார் திட்டத்தின் படி மாணவி, தமீமை சந்திக்க ஒப்புக் கொண்டது போல் நடித்துள்ளார். அதன்படி, உளுந்தூர்பேட்டையில் தான் இருப்பதாக தமீம் கூற போலீசார் சென்றுள்ளனர். தமீமின் லொகேஷனை வைத்து ஒரு விடுதியில் தங்கியிருந்த தமீமை சுற்றி வளைத்து பிடித்த எண்ணூர் போலீசார், அவரை கைது செய்தனர். சென்னைக்கு கொண்டுவரப்பட்ட தமீமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.