ஸ்பீக்கரில் சப்தமாக பாடல் கேட்டதால் தகராறு- ஓட்டுநர் அடித்துக் கொலை

 
murder

புளூ டூத் ஸ்பீக்கரில் சப்தமாக பாடல் கேட்டதால் தகராறால் ஆத்திரத்தில்  ஓட்டுநர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder

கோவை செட்டிபாளையம் - ஈச்சனாரி சாலையில் சத்தியமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கட்டுமான பணிகளுக்கான பொருட்கள் விற்பனை செய்யும் கடை அமைந்துள்ளது. இங்கு கடந்த ஒரு மாதமாக திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் (32). மினி லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். மேலும் கடையின் அருகே உள்ள தங்கும் அறையில் சக ஓட்டுநரான கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த சியாஸ் (34), மற்றும் லோடுமேன் முருகன் ஆகியோரும் தங்கியிருந்தனர். 

இந்நிலையில் நேற்று இரவு ஆறுமுகம், முருகன், சியாஸ் ஆகியோர் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது சியாஸ் அறையில் இருந்த புளூ டூத் ஸ்பீக்கரில் அதிக சப்தத்துடன் பாடல் கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து ஆறுமுகம் சப்தத்தை குறைக்க அறிவுறுத்தியுள்ளார். ஆனாலும் சப்தம் குறைக்காததால் ஆறுமுகம் ஸ்பீக்கர் சப்தத்தை குறைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சியாஸ், ஆறுமுகத்தை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் மது பாட்டில்களாலும் தொடர்ந்து தாக்கியதில் இரத்த வெள்ளத்தில் ஆறுமுகம் சரிந்து விழுந்தார். இதையடுத்து சியாஸ் அங்கிருந்து தப்பி ஓடினார். 

சப்தம் கேட்டு வந்த முருகன் உள்ளிட்டோர் ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஆறுமுகம் அதிகாலை 3 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற சுந்தராபுரம் போலீசார் தடவியல் துறையினருடன் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து  தப்பி ஓடிய சயாஸை தேடி வருகின்றனர். பாடலின் சப்தத்தை குறைக்க வலியுறுத்தி நடந்த தகராறில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.