மூத்த தாரத்து மகனை வெட்டிக்கொன்று எரித்த சித்தி

 
ட்

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அடுத்த காமாட்சிபுரம் கிராமத்தில் சாலையோரத்தில் உள்ள குப்பை தொட்டியில் எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக பெரியகுளம் போலீசாருக்கு தகவல் வர அவர்கள் விரைந்து சென்று இறந்த நிலையில் கிடந்த பிணத்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

 தலையில் பலத்த காயம் பட்டு இருப்பதும் உடல் முழுவதும் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டிருப்பதும் அதன்பின்னர் தீயிட்டு எரிக்கப்பட்டது தடயவியல் ஆய்வில் தெரியவந்தது.   அதன்பின்னர் அந்த சடலம் யார் என்பது குறித்த விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த சிங்காரவேல் என்பவரின் முதல் மனைவி ராஜம்மாளுக்கு பிறந்த செந்தில் என்பது தெரியவந்தது.

ட்ட்

சிங்காரவேல் இறந்துவிட்டதால்,   முதல் மனைவி ராஜம்மாள் இறந்து விட்டதால்,   அவருக்கு பிறந்த செந்தில் கவனிப்பார் இன்றி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஊரை விட்டு சென்றிருக்கிறார்.   பல்வேறு மாநிலங்களில் சாமியாராக சுற்றி திரிந்திருக்கிறார்.

 கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் அவர் சொந்த ஊர் பெரியகுளம் காமாட்சிபுரத்திற்கு வந்திருக்கிறார்.   ஊருக்கு வந்ததும் தனது பெயரில் 24 ஏக்கர் நிலத்தை விற்றிருக்கிறார்.   இதில்தான் தகராறு ஆரம்பித்திருக்கிறது.

 சொத்தை விற்ற பணத்தில் பங்கு கேட்டிருக்கிறார்கள் சித்தியும், சித்தி மகன் செல்வகுமாரும்.  அவர்களுக்கு பங்கு தர மறுத்திருக்கிறார் செந்தில்.   இதனால் சித்தி இரத்தினகிரி அவரது மகன் செல்வகுமார் இரண்டு பேரும் சேர்ந்து செந்திலை அடித்து பின்னர் வெட்டி கொலை செய்து இருக்கிறார்கள்.  அதன் பின்னர் ஊரின் சாலையோரம் உள்ள குப்பை தொட்டியில் போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து இருக்கிறார்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

 இதையடுத்து செல்வகுமார்,  ரத்தினகிரி மேலும் இந்த கொலையில் தொடர்புடைய மேலும் 2 பேரை 24 மணி நேரத்தில் கைது செய்து பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர் போலீஸார்.