மனைவியை வேலை செய்ய சொன்னதால் ஆத்திரம்... அண்ணியை கொடூரமாக கொன்ற பவுன்சர்
திருவள்ளூர் அருகே மனைவியை பற்றி தவறாக பேசிய அண்ணியை காய் நறுக்கும் கத்தியால் குத்தி கொன்றுவிட்டு, காவல் நிலையத்தில் சரணடைந்துள்ள பவுன்சரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் அடுத்த இருளஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா (30). தனியார் தொழிற்சாலையில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சாந்தி (26) என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகள் இருந்து வருகிறது. இந்நிலையில் இளையராஜாவின் சகோதரரான பவுன்சர் இசைமேகம் (28) என்பவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு லாவண்யா என்பவரை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். சாந்தி எல்லா வேலைகளும் வீட்டில் தானே எடுத்து செய்வதால் லாவண்யாவை வீட்டு வேலை செய்யக்கோரி கேட்டுள்ளார். ஆனால் லாவண்யா வீட்டு வேலை எடுத்து செய்யாமல் இருந்து வந்துள்ளார். நீண்ட நாட்களாக அவர்கள் வீட்டில் குடும்ப வேலைகளை எடுத்து செய்வதில் சாந்திக்கும் லாவண்யாவுக்கும் பிரச்சனை நிலவி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு கணவர் இளையராஜா வெளியே சென்று இருந்த நிலையில், மீண்டும் சாந்தி லாவண்யாவை வேலை செய்யாமல் இருந்து வருவதைப் பற்றி சகட்டு மேனிக்கு அவரைப் பற்றி தவறாக பேசியதாக கூறப்படுகிறது. மனைவியை பற்றி தவறாக பேசியதை பொறுத்துக் கொள்ள முடியாமல் மது போதையில் இருந்த இசைமேகம் அண்ணியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் வீட்டில் சமையல் கட்டில் இருந்த காய் நறுக்கும் கத்தியை கொண்டு அண்ணி சாந்தியின் நெஞ்சு, தாடை, கை பகுதியில் சரமாரியாக இசை மேகம் குத்தியுள்ளார். இதில் சாந்தி இரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அலறல் சத்தம் கேட்டு வந்து சாந்தி இரத்த வெள்ளத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு பேரம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மப்பேடு போலீசாருக்கு தகவல் சென்றதால் பேரம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த சாந்தி உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தலைமறைவான இசைமேகத்தை
தேடி வந்த நிலையில் மப்பேடு காவல் நிலையத்தில் இரவே இசைமேகம் சரணடைந்துள்ளார்.


