திருமணமான ஆணுடன் பழகிய அக்காவை வெட்டிக் கொன்ற தம்பி
நெல்லையில் திருமணம் முடிந்த ஆணுடன் பழகியதால் அக்காவை அரிவாளால் வெட்டி கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் தேவர்குளம் தச்சி குடியிருப்பில் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவர்களது மகள் ராதிகா (வயது 28). மகன் கண்ணன் (வயது 25). ராதிகாவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான ஆணுடன் நீண்ட நாட்களாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த விவகாரம் ராதிகாவின் தம்பி கண்ணனுக்கு தெரிய வருகிறது. உடனே கண்ணன் தனது அக்கா ராதிகாவை அந்த ஆணுடன் இருக்கும் பழக்கத்தை கைவிடுமாறு கண்டித்திருக்கிறார். ஆனால் ராதிகா அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அந்த ஆணுடன் நெருக்கமாக இருந்திருக்கிறார். இதையடுத்து நேற்று மாலை இது தொடர்பாக அக்கா ராதிகா தம்பி கண்ணன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.
தகராறு முற்றிய நிலையில் கண்ணன் தனது வீட்டில் இருந்த அரிவாளால் ராதிகாவை சரமாரியாக வெட்டி இருக்கிறார். அவரது அலரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ராதிகாவை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே ராதிகா பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக தேவர் குளம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அக்காவை கொலை செய்த தம்பி கண்ணன் வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்றது தெரியவந்தது. உடனடியாக காவல்துறையினர் சில மணி நேரத்திலேயே கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகாத முறையில் இருந்த பழக்கத்தை கைவிட மறுத்ததால் தனது அக்காவை தம்பியே வெட்டி கொலை செய்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


