சிறுமிக்கு பாலியல் தொல்லை- உடந்தையாக இருந்த தாய், கள்ளக்காதலன் கைது

ஆத்தூர் அருகே 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு உடந்தையாக இருந்த தாய் மற்றும் தாயின் கள்ளக்காதலன் உட்பட இரண்டு பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் லாரி ஓட்டுநர். இவரது மனைவி சசிகலா இவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவர் சசிகலாவுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இந்நிலையில் சசிகலாவின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த குமரேசன் சசிகலாவின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மாணவி தனது உறவினருடன் ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். இதில் சிறுமிக்கு குமரேசன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும், அதற்கு சிறுமியின் தாயார் சசிகலாவும் உடந்தையாக இருந்திருப்பதும் தெரியவந்தது. அதை தொடர்ந்து குமரேசன் மற்றும் சசிகலா ஆகிய இரண்டு பேர் மீதும் போக்சோ மற்றும் அத்துமீறி வீட்டுக்குள் நுழைதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று குமரேசனையும் சிறுமியின் தாயார் சசிகலாவையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.