வீட்டின் திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி கழுத்தறுத்து கொலை

 
murder murder

மணப்பாறை அருகே மூதாட்டி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

murder

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பெரியகுளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் குழந்தைத்தெரசு (வயது 60). இவரது கணவர் சூசைமாணிக்கம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்ட நிலையில் கொத்தனார் வேலை பார்த்து வரும் இவரது மகன் சவரிமுத்து திருச்சியிலும், மகள் ஜெபமாலை மேரி திருமணமாகி குடும்பத்தினருடன் முகவனூரிலும் வசித்து வருகின்றனர். இதனால் குழந்தைதெரசு மட்டும் அவரது வீட்டில் தனியாக வசித்து வருவதோடு 100 நாள் வேலை மற்றும் கூலி வேலைக்கும் சென்று வந்துள்ளார். இவர் இரவில் தனது ஓட்டு வீட்டை பூட்டிவிட்டு திண்ணையில் கயிற்று கட்டிலில் படுத்துதூங்குவது வழக்கம்.

அதேபோல் நேற்று இரவும் தனது வீட்டின் திண்ணையில் கயிற்று கட்டில் போட்டு படுத்து தூங்கியுள்ளார். இன்று காலை அவர் படுத்திருந்த கட்டிலுக்கு கீழே ரத்தம் சொட்டிக்கிடப்பதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அருகில் சென்று பார்த்தபோது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ந்து போயினர். பின்னர் இதுகுறித்து வையம்பட்டி காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மூதாட்டியின் உடலை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்ட போது அவரது கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்கசங்கிலி மற்றும் ஒரு சவரன் தங்ககாசு என மொத்தம் 3 சவரன் நகை மாயமாகியிருந்தது. மூதாட்டி நகைக்காக கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் சம்பவ இடத்தில் குவிந்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்ட எஸ்.பி., செல்வநாகரெத்தினம், சம்பவ இடத்தில் நேரில் விசாரணை நடத்தினார். மேலும் மோப்பநாய், விரல் ரேகை நிபுணர்கள் மற்றும் தடய அறிவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்பநாய் வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள கல்லறைத்தோட்டத்தில் உள்ள ஆலமரம் வரை சென்று திரும்பியது. ஆலமரத்தின் அடியில் இரவில் சிலர் மது அருந்தியதற்கான அடையாளங்கள் இருந்நதால் மது அருந்தியவர்களுக்கும் கொலைக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

வையம்பட்டி போலீசார்‌ மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் வீட்டின் திண்ணையில் தூங்கிய மூதாட்டி கழுத்து அறுக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டிப்பதால் நகைக்காக நடந்த கொலையா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.