கணவர், குழந்தையை தவிக்கவிட்டு இன்ஸ்டா காதலனுடன் ஓடிப்போன மகளை கொலை செய்த தந்தை
கணவர் குழந்தையை விட்டு, இன்ஸ்டா மூலம் பழக்கமான நபருடன் ஓடிப்போன மகளை மீட்டு கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தனது மகள் சீமியா (22) என்பவரை திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் பிரவீன் குமார் என்பவருக்கு கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்திருந்தார். (12ம் வகுப்பு முடித்தவுடன் திருமணம் செய்து வைத்துள்ளார்) இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மகளின் அருகிலேயே இருக்க வேண்டும் என நினைத்த பெற்றோர் திருப்பூரில் உள்ள முருகம்பாளையம் பாரக்காடு பகுதிக்கு குடியேறி அருகில் உள்ள சாய ஆலையில் பணியாற்றி வந்துள்ளனர். இதனிடையே மது போதைக்கு அடிமையான கணவர் பிரவீன் குமார் மது அருந்திவிட்டு அடித்து தொல்லை செய்து வந்ததாகவும் இதன் காரணமாக இன்ஸ்டா மூலம் பழக்கமான நபருடன், கணவர் மற்றும் குழந்தையை விட்டு விட்டு கடந்த 17 தினங்களுக்கு முன்பு சீமியா வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த ஆறுமுகம் வீரபாண்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் கன்னியாகுமரியில் தங்கியிருந்த சீமியாவை மீட்டு அழைத்து வந்து நேற்று காவல் நிலையத்திலிருந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் இன்று வீட்டில் இருந்த ஆறுமுகம் தனது மனைவி வெளியே கடைக்கு சென்ற பின்னர் கட்டிலில் படுத்திருந்த மகளின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். கடைக்குச் சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்து பார்த்த தாயார் ரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்த மகளை பார்த்து கதறி அழுததை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த வீரபாண்டி போலீசார் சீமியா உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாலை கொலை செய்துவிட்டு வீட்டிலேயே அமர்ந்திருந்த ஆறுமுகத்தையும் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். சம்பவ இடத்தில் மாநகர துணை ஆணையர் தீபாசத்யன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


