திருமணம் செய்து வைக்க சொல்லி தொல்லை கொடுத்த மகனை கொலை செய்த தந்தை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே குடிபோதையில் திருமணம் செய்து வைக்க சொல்லி தொழில் செய்யும் மரப்பட்டறையை அடித்து நொறுக்கிய 34வயது மகனை ரீப்பர் கட்டையால் அடித்துக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வன்னியன்விடுதி கிராமத்தை சேர்ந்தவர் சுப்புக்கண்ணு(61). இவர் அவரது மகன் இராமதாஸ்(34) உடன் சேர்ந்து வன்னியன் விடுதியில் மரப்பட்டறை நடத்தி வருகிறார். இவரது மற்றொரு மகன் ராம்குமார் திருமணமாகாத நிலையில் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில்தான் இராமதாசுக்கு சில ஆண்டுகளாக திருமணத்திற்கு பெண் பார்த்து வந்த நிலையில், ஜாதகம் பொருந்தாமல் திருமணம் தள்ளிக் கொண்டே சென்றதாக கூறப்படுகிறது. இதனால பல மாதங்களாகவே திருமணம் தொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் மோதல் போக்கு நீடித்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு மதுபோதையில் மரப்பட்டறையில் இருந்த தந்தையிடம், “தனக்கு திருமணம் செய்து வைக்காமல் ஏன் இருக்கிறாய்?, எங்காவது போய் தொலை” என்று இராமதாஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் மரப்பட்டறையின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த ஆஸ்பெஸ்டாஸ் ஷெட்டை ராமதாஸ் அடித்து நொறுக்கியுள்ளார். நீண்ட நேரம் பொறுமையாக மகனை சமாதானப்படுத்தி வந்த சுப்புக்கண்ணு ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து இராமதாஸை அங்கு கிடந்த ரீப்பர் கட்டையால் தாக்கியுள்ளார். இதில் இராமதாஸின் தலையில் பலத்த காயமடைந்து அங்கேயே சுருண்டு விழுந்து துடிதுடித்து இறந்துள்ளார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஆலங்குடி போலீசார், இராமதாஸின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மகனைத் தாக்கிக் கொன்ற சுப்புக்கண்ணுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


