மகளை கொன்ற தந்தை! அதிரவைக்கும் காரணம்
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு வலியால் துடித்த தனது மகளை கொலை செய்து விட்டு தற்கொலை முயற்சி செய்த முன்னாள் உதவி காவல் ஆய்வாளரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கோதண்டராமன். 69 வயதாகும் கோதண்டராமன் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு 33 வயதில் சுமலதா என்கிற மகள் இருக்கிறார். நான்காண்டுகளுக்கு முன்பு குரும்பன் கோட்டை பகுதியில் திருமணம் செய்து வைக்கப்பட்ட இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சுமலதாவிற்கு தொடர்ச்சியாக சுவாச பிரச்சனை மற்றும் சிறுநீரக பிரச்சனை இருந்ததால் கணவர் சிறிது மாதங்களுக்கு முன்பு சுமலதா(33) அவரது தந்தை வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில் தொடர்ச்சியாக சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்ட தனது மகளை புதுச்சேரி அரசு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்து உள்ளார் கோதண்டராமன். எவ்வளவு சிகிச்சை அளித்தாலும் மகளுக்கு உடல் உபாதைகள் தொடர்ச்சியாக ஏற்படுவதும், வலியால் மகள் தொடர்ச்சியாக அவதிப்படுவதையும் தாங்க முடியாத கோதண்டராமன் இன்று காலை மகளை வீட்டிலிருந்த கத்தியால் கழுத்து அறுத்து கொலை செய்துள்ளார்.
பின்னர் தானும் தற்கொலை முயற்சி செய்த நிலையில் நடை பயிற்சி முடிந்து வீடு திரும்பிய மனைவி கழுத்தறுத்து கிடந்த தனது மகள் மற்றும் கணவரை பார்த்து கூச்சலிட்டார் இந்த சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு கண்டமங்கலம் போலிசார் நேரில் வந்து கோதண்டராமன் மகள் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே நேரத்தில் சம்பவ இடத்திலேயே மகள் சுமலதா(33) மரணம் அடைந்துள்ளார். இந்நிலையில் கொலை செய்த தந்தை மீது வழக்கு பதிவு செய்துள்ள கண்டமங்கலம் காவல்துறையினர் அவரை மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். வலியால் துடித்த மகளை தந்தையே கொலை செய்த சம்பவம் கண்டமங்கலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


