உனக்கு ஓவர் வாய்... மதுபோதையில் இளைஞரை வெட்டிக் கொன்ற சக நண்பர்கள்

 
murder

கும்மிடிப்பூண்டியில் மது போதையில் தொடர்ந்து கேலி செய்து தரக்குறைவாக நடத்தியதால் நண்பனை கொலை செய்த 17வயது சிறார் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பில்லாக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அஜய் (21) திருமணமாகாதவர். இவர் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வெல்டிங் வேலை செய்து வந்தார். மேலும் ஓடு வேயும் பணியும் செய்து வந்துள்ளார். கடந்த 12ஆம் தேதி காலை வழக்கம் போல வேலைக்கு சென்ற அஜய் இரவு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் இரவு அஜய்யை தொடர்பு கொள்ள முயற்சித்தும் செல்போன் இணைப்பு கிடைக்கவில்லை. இரவு பணிக்காக சென்று விட்டு வீடு திரும்புவார் என  அவரது குடும்பத்தினர் காத்திருந்துள்ளனர்.

இந்நிலையில் மறுநாள் 13ஆம் தேதி பில்லாக்குப்பம் பகுதியில் உள்ள சுடுகாடு அருகே ஆடு, மாடு மேய்ச்சலில் இருந்தவர்கள் அஜய் வெட்டு காயங்களுடன் சடலமாக கிடப்பதாக சிப்காட் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் கழுத்து அறுபட்ட நிலையிலும், பின் கழுத்தில் வெட்டு காயங்களுடன் முகம் சற்று தீய்ந்த நிலையிலும் இருந்துள்ளது. தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். கொலை செய்யப்பட்ட அஜயின் சடலத்தில் இருந்த வெளியேறிய ரத்தம், ஆடைகள் ஆகியவற்றை கைப்பற்றினர். தொடர்ந்து காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

murder

இதுகுறித்து சிப்காட் போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா 2023 சட்டத்தில் 103 பிரிவின் கீழ் (கொலை வழக்கு) வழக்கு பதிவு செய்து கொலைக்கான முன்விரோதம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் 4தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டனர். முதற்கட்டமாக அதே கிராமத்தில் அஜயுடன் சுற்றித்திரிந்த சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த நபர்களை பிடித்து விசாரணையை தொடங்கினர். அடுத்தகட்டமாக கிராமத்திற்கு செல்லும் வழியில் தொழிற்சாலைகளில் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். கொலை நடந்த நாளன்று அஜய் அணிந்திருந்த ஆடையை அடையாளமாக கொண்டு காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது அஜய்யுடன் சென்றவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கொலை சம்பவம் அரங்கேறிய இடத்தில் இருந்த செல்போன் எண்கள் குறித்த ஆய்வையும் மேற்கொண்டனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளில் கிடைத்த காட்சிகளின் அடிப்படையில் அந்த நபர்களை கண்டறிந்தனர். அப்போது  அதே கிராமத்தை சேர்ந்த 17வயது சிறுவன் மற்றும் தனுஷ் என்கிற தேவராஜ் ஆகிய இருவரை பிடித்த தனிப்படை காவல்துறையினர் அவர்களிடம் கிடுக்குபிடி விசாரணையை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

பில்லாக்குப்பம் கிராமத்தை சேர்ந்த அஜய், 17வயது சிறுவன், தனுஷ் ஆகியோர் ஒன்றாக மது அருந்துவது வாடிக்கை. ஒன்றாக மது அருந்தியதும் போதை தலைக்கேறிய பின்னர் அஜய் தமது நண்பர்கள் இருவரையும் கேலி செய்து தரக்குறைவாக பேசி மட்டம் தட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இது குறித்து அஜய்யிடம் பல முறை முறையிட்டும் மதுபோதையில் நண்பர்களை மட்டம் தட்டி தானே அனைவரை விட சிறந்தவர் என்பது போல அஜய்யின் நடவடிக்கைகள் அமைந்து வந்துள்ளன. ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த நண்பர்கள் அஜய்யை தீர்த்து கட்ட திட்டம் தீட்டியுள்ளனர். 17 வயது சிறுவன் மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் கொலையை அரங்கேற்றுவதற்காக மது அருந்தலாம் என கூறி மற்ற இருவரை துணைக்கு அழைத்துள்ளனர். 4 பேர் ஒன்று சேர்ந்த பிறகு 17வயது சிறுவன் திட்டமிட்டது போல வேலைக்கு சென்றிருந்த அஜய்யை மது விருந்து என கூறி அழைத்துள்ளனர். தமது நண்பர்களின் அழைப்பின் பேரில் அவர்களுடன் சென்று அஜய் மது அருந்தியுள்ளனர். மது போதை தலைக்கேறியவுடன் வழக்கம் போல தமது நண்பர்களை மட்டம் தட்டி பேசியுள்ளார். 

murder

இந்த சந்தர்ப்பத்திற்காக எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் அஜய்யை சரமாரியாக வெட்டி கொலை செய்து தங்களது ஆத்திரத்தை தீர்த்துள்ளனர். இதில் மது குடிக்க ஆசைப்பட்டு டிப்ளமோ பயிலும் 17வயது சிறுவன்  வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து பில்லாக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், தனுஷ் என்கிற தன்ராஜ் (20), கோளூர் கிராமத்தை சேர்ந்த 17வயது சிறுவன், பசுபதி (20) ஆகிய 4பேரை கைது செய்த சிப்காட் காவல்துறையினர் அவர்களை கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 17வயது சிறார் இருவரை சென்னை கெல்லீசில் உள்ள சிறார் சீர்திருத்த பள்ளியும், மற்ற இருவரை புழல் சிறையிலும் அடைத்தனர். துரிதமாக செயல்பட்டு கொலையாளிகளை கைது செய்த சிப்காட் காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் பாராட்டினார். கேலி, கிண்டல் செய்த நண்பனை மது விருந்து கொடுத்து நண்பர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.