மனைவியுடன் இன்ஸ்டா மூலம் கள்ளக்காதல்... நண்பரை அடித்தே கொன்ற கணவன்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மனைவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் தகாத உறவு வைத்திருந்த நண்பனை வாலிபர் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. அங்கு ஜேசிபி இயந்திரத்தின் ஆப்பரேட்டராக மேட்டுப்பட்டியை சேர்ந்த யோகேஸ்வரன் வயது(22) மற்றும் கோணப்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் வயது(35) என்ற இருவரும் பணி செய்து வந்துள்ளனர். இதில் ராஜேஷ்குமாருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் ராஜேஸ்குமாரின் மனைவியுடன் யோகேஸ்வரன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளார். நாளடைவில் அவர்களது பழக்கம் தகாத உறவாக மாறியுள்ளது. இதனை அறிந்த ராஜேஷ் யோகேஸ்வரனை பலமுறை கண்டித்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை கல்குவாரியில் இருவருக்கும் இப்பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ராஜேஷ்குமார் அங்கிருந்த கட்டையால் யோகேஸ்வரனை சரமாரி தாக்கியுள்ளார். இதில் யோகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரியவே விரைந்து வந்த போலீசார் இறந்த யோகேஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களை வரவழைத்துள்ள அலங்காநல்லூர் போலீசார் ராஜேஷ் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


