கள்ளக்காதலனுடன் நெருக்கமாக இருந்த மனைவி- ஆத்திரத்தில் இரும்பு கம்பியால் தலையில் அடித்த கணவன்

குமரியில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்ய முயன்று விட்டு கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் மலையோர கிராமமான பத்துகாணி பகுதியை சேர்ந்தவர் அனில்குமார் (48), ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி தன்யா (40) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். அனில்குமார் ஆட்டோ ஓட்டும் தொழிலோடு சேர்த்து பத்துகாணி சந்திப்பு பகுதியில் ஒரு பலசரக்கு கடையும் நடத்தி வருகிறார். இந்த கடையை அவரது மனைவி தன்யா கவனித்து வரும் நிலையில், தன்யாவுக்கு கடைக்கு பொருட்கள் வாங்க வரும் அதே பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகரான மது குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் இரவு நேரத்தில் அனில்குமார் கடைக்கு வந்தபோது அங்கே மனைவி தன்யா மது குமாருடன் முத்தம் பரிமாறி கொண்டிருந்துள்ளார். இதனை கண்ட அனில் குமார் அங்கு வைத்து ஏதும் கேட்காமல் வீட்டிற்கு வந்தபின் தன்யாவிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதனை தன்யா அவரது கள்ளக்காதலன் மது குமாரிடம் தெரிவித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மது குமார் மறுநாள் காலை அனில்குமாரின் வீட்டிற்கு சென்று அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளார். சுதாரித்து கொண்ட அனில்குமார், மது குமார் வெட்ட வரும்போது விலகியதால் அரிவாள் தென்னை மரத்தில் பட்டுள்ளது. இதனையடுத்து மது குமார் அனில்குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளார். இதில் படுகாயமடைந்த அனில்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததோடு, ஆறுகாணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து மது குமாரை கைது செய்தனர்.
தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த மது குமார் மீண்டும் தன்யாவுடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்டு இருவரும் உல்லாசத்தில் இருந்து வந்துள்ளனர். இது அனில்குமாருக்கு தெரியவர பலமுறை கண்டித்து உள்ளார். இருந்தும் தன்யா அவரது பேச்சை கேட்காமல் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற அனில்குமார், தன்யாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்து இன்று காலை தன்யா வழக்கம்போல் கடைக்கு வந்த போது அவரை பின்தொடர்ந்து வந்த அனில்குமார் கடையில் வைத்து தன்யாவுடன் தகராறில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்துள்ளார் .வாக்குவாதம் இருவருக்கும் இடையே முற்றிப்போக ஆத்திரமடைந்த அனில்குமார் கையில் எடுத்துவந்த இரும்பு கம்பியால் தன்யாவின் தலையில் அடித்துள்ளார். தலையில் பலத்த காயமடைந்த தன்யா ரத்தம் சொட்ட சொட்ட தரையில் மயங்கி விழுந்துள்ளார்.
பேச்சு மூச்சு இல்லாமல் மனைவி கிடப்பதை பார்த்த அனில்குமார், மனைவி இறந்துவிட்டார் என்று எண்ணி நேராக வீட்டிற்கு சென்று அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இதுகுறித்த தகவலை பொதுமக்கள் போலீசாருக்கு தெரிவித்த நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆறுகாணி போலீசார் கடை முன்பு மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிய படி கிடந்த தன்யாவை மீட்டு கேரள மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தொடர்ந்து வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட அனில் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.