கள்ளக்காதல் சந்தேகம்- மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவன்
கள்ளக்காதல் சந்தேகத்தால் வடமாநில பெண் தொழிலாளி தலையில் கணவரே கல்லைப் போட்டு படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் புகழூர் ரயில் நிலையத்தை அடுத்த கொங்குநகரில் முருகையன் என்பவர் பால் பண்ணை நடத்தி வருகிறார். இவரது பால் பண்ணைக்கு உதவியாளர் பணிக்கு ஆள் வேண்டும் என கேட்ட போது, நடையனூரில் வசிக்கும் வடமாநில ஏஜெண்ட் மூலம் பீகாரை சார்ந்த சன்மதிமதி தேவி என்ற பெண்ணும் அவருடைய கணவர் புக்கர் மாஜி என்பவரும் கடந்த ஜூலை 1ம் தேதி வேலைக்கு சேர்ந்து பால் பண்ணையிலேயே தங்கி இருந்துள்ளனர். ஜூலை 4 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் அவர்கள் தங்கி இருந்த இடத்தில் அந்தப் பெண்ணின் கணவர் அப்பெண்ணணிடம் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறாயா எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அப்போது அந்தப் பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்திருக்கிறார்.
உடன் இருந்த அவரது தம்பி அருகில் தங்கி வேலை பார்க்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். தகவலறிந்து பால்பண்ணை உரிமையாளர் மற்றும் அருகில் இருப்பவர்கள் அங்கு சென்று பார்த்த போது அப்பெண்ணின் உடல் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது, அவரது கணவர் மாயமாகி இருந்தார். இது தொடர்பாக பால் பண்ணையின் உரிமையாளர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண்ணின் தம்பியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு மாயமான கணவரை தேடி வந்தனர்.
வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளர் ஜெகநாதன் தலைமையில் எஸ்ஐ அழகுராமு உட்பட நான்கு பேர் கொண்ட தனிப்படை குற்றவாளியை கடந்த இரண்டு மாதங்களாக தேடி வந்தனர். குற்றவாளியான புக்கர்மாஜியின் செல்போன் அலைவரிசையை வைத்து பீகார் மாநிலம் பாட்னாவில் குற்றவாளி பதுங்கி இருப்பதை கண்டுபிடித்த தனிப்படையினர் பீகார் விரைந்து பாட்னா காவல்துறையினர் உதவியுடன் குற்றவாளியை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட புக்கர்மாஜி பீகாரில் இருந்து இரயில் மூலம் கரூர் மாவட்டத்திற்கு அழைத்துவரப்பட்டு நீதிபதியின் முன் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.