வேளாங்கண்ணிக்கு காதலியுடன் வந்த கர்நாடக இளைஞர் அடித்துக் கொலை

 
murder

நாகை அடுத்த வேளாங்கண்ணியில் காதலியுடன் வந்த பெங்களூர் இளைஞரை அடித்துக் கொலை செய்த நண்பர்களின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

murder

கர்நாடகா மாநிலம் பெங்களூர்  சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 22). அவரது காதலி அதே முகவரியைச் சேர்ந்த எலன்மேரி (21). இருவரும்  கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேளாங்கண்ணிக்கு வந்து மாதா கோவில் பின்புறம் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இருவரும் மறுநாள் வேளாங்கண்ணி மாதா கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதன் பின் இரண்டு நாள் கழித்து வேளாங்கண்ணிக்கு வந்த  ஜனார்த்தனனின் நண்பர்களான கர்நாடகா மாநிலம் சிவமுகா பகுதியை சேர்ந்த சாகர் , ஜீவா இருவரும் ஜனார்த்தனன் மற்றும் எலன்மேரியுடன் அவர்களது அறையிலேயே தங்கியிருந்துள்ளனர். 

இந்நிலையில் இன்று எலன்மேரியைத் தவிர மற்ற  மூவரும் வெளியே சென்றுள்ளனர். எலன்மேரி இருந்த அறைக்கு வந்து உனது கணவர் ஜனார்த்தனனை ரயில்வே ஸ்டேஷன் அருகில் கொலை செய்து போட்டு விட்டோம் என்று தெரிவித்துவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். எலன்மேரி, ஜனார்த்தனனை வேளாங்கண்ணி ரயில்வே ஸ்டேஷன் அருகில் தேடி வந்து பார்த்தபோது, ரயில்வே ஸ்டேஷனுக்கு கிழக்குப் பகுதியில் கருவை காட்டுகளுக்கு இடையே ஜனார்த்தனின் முகம் மற்றும் தலையில் இரத்தக்காயத்துடன் இறந்த கிடந்தது தெரியவந்துள்ளது. தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தப்பிய ஓடிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.