பிரியாணியை கீழே சிந்தி சாப்பிட்டதால் நண்பனை கொன்று வீட்டின் முன் புதைத்த போதை ஆசாமி
பர்கூர் அருகே குடிபோதையில் நண்பரை கொன்று உடலை வீட்டு வளாகத்தில் புதைத்த துணி வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள B.R.G. மாதேப்பள்ளியை சேர்ந்தவர் சென்ன கேசவன் (40). துணி வியாபாரி. இவர் இவரது வீட்டின் முன்பு இறந்த நிலையில் ஆண் உடல் கிடப்பதாக அந்த பகுதியில் இருந்தவர்களிடம் கூறினார். இது குறித்து தகவல் அறிந்த பர்கூர் டி.எஸ்.பி. முத்துகிருஷ்ணன், காவல் ஆய்வாளர்கள் இளவரசன், கஸ்தூரி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் உடலை பார்த்து விசாரித்த போது உடல் முழுவதும் சேறும், சகதியுமாக இருந்தது. இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில் இறந்தவர் பெயர் கணேசன்(48) கூலித்தொழிலாளி, அதே பகுதியை சேர்ந்தவர் என்றும், சென்னகேசவனும் அவரும் 2 நாட்களுக்கு முன்பு ஒன்றாக சுற்றியதும் தெரிய வந்தது. இதையடுத்து சென்னகேசவனிடம் போலீசார் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர். அதில் சென்ன கேசவன் கணேசனை கொன்றது தெரியவந்தது.
சென்னகேசவன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கல்லாவியை சேர்ந்தவர் கணேசன். இவர் கடந்த 20 ஆண்டுகளாக பர்கூரில் தங்கி கேபிள் டி.வி. தொழில் செய்து வந்தார். இவருக்கு கல்பனாஸ்ரீ என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு நண்பர்களுடன் சேர்ந்து மனைவி கல்பனாஸ்ரீயை கணேசன் கொலை செய்தார். இந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த கணேசன் பின்னர் சென்னை கிண்டிக்கு சென்று கூலி வேலை செய்து வந்தார். அவ்வபோது பர்கூர் வரும் அவருக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டது. எனக்கு திருமணமாகி விட்டது. குழந்தை இல்லை. எனது மனைவி என்னை பிரிந்து சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்து வந்தேன். பர்கூர் வரும் கணேசனும் நானும் மது குடிப்போம். அப்போது கணேசன் எங்கள் வீட்டில் தான் தங்குவார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்படி மது குடித்தோம். அந்த நேரம் கணேசன் பிரியாணியை கீழே சிந்தியவாறு சாப்பிட்டார். இப்படி சாப்பிட்டால் யார் சுத்தம் செய்வது என கேட்டேன். அப்போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் நான் கணேசனை தாக்கினேன். இதில் மயங்கி விழுந்து அவர் இறந்தார். இதனால் நான் கணேசன் உடலை இரவு எங்கள் வீட்டு வளாகத்தில் 2 அடி ஆழத்தில் குழி தோண்டி புதைத்து விட்டேன். பின்னர் 17ந் தேதி திங்கட்கிழமை எதுவும் தெரியாதது போல இருந்தேன். 18-தேதி செவ்வாய்க்கிழமையும் யாருக்கும் தெரியவில்லை. அன்று இரவு மழை பெய்தது. இதில் உடல் வெளியே வந்தது. மேலும் துர்நாற்றமும் அடித்தது. இதில் அதிர்ச்சி அடைந்த நான் உடலை வெளியே எடுத்து சாலையில் போட்டு விட்டேன். பின்னர் எனது வீட்டு முன்பு உடல் கிடப்பதாக பொதுமக்களிடம் கூறினேன். ஆனால் போலீசார் என்னை கண்டுபிடித்து விட்டனர் என வாக்குமூலத்தில் சென்னகேசவன் தெரிவித்தார். இந்த வழக்கு சம்மந்தமாக சென்னகேசவனை கைது செய்த கந்திகுப்பம் போலீசார் அவரிடம் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.


