மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு கணவனும் தற்கொலை! கதறு 3 குழந்தைகள்

 
murder murder

புதுக்கோட்டை அருகே மனைவி மீது சந்தேகப்பட்ட கணவன் தகராறில் ஈடுபட்டு மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

murder

புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் அருகே உள்ள கீழ காயாம்பட்டியை சேர்ந்தவர் வீரமுத்து (35). இவரது மனைவி ராஜேஸ்வரி (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் ஒன்பது வயது, 6 வயதில் இரண்டு ஆண் குழந்தைகளும் இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. வீரமுத்துவும் ராஜேஸ்வரியும் கட்டடப் பணியாளர்கள். இந்நிலையில் வீரமுத்து அவரது மனைவி ராஜேஸ்வரி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் வீரமுத்து அவரது மனைவி ராஜேஸ்வரி மற்றும் அவரது மூன்று குழந்தைகளும் அருகே உள்ள கல்லுபள்ளம் கிராமத்தில் நடந்த நாடகத்தை பார்க்க சென்றவர்கள் அந்த பகுதியில் வசிக்கும் வீரமுத்துவின் தாயார் லட்சுமியிடம் மூன்று குழந்தைகளையும் விட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.  வீடு திரும்பிய கணவன் வீரமுத்துவுக்கும் மனைவி ராஜேஸ்வரிக்கும் இடையே பயங்கர தகராறு ஏற்பட்ட நிலையில் வீரமுத்து அரிவாளை எடுத்து ராஜேஸ்வரியை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அவரும் அவரது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

suicide

பின்னர் வீரமுத்துவின் தாயார் லட்சுமி நாடகம் முடிந்து பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வீரமுத்துவின் வீட்டிற்கு சென்றபோது வீரமுத்துவின் மனைவி ராஜேஸ்வரி கழுத்தில் வெட்டு காயங்களுடன் சடலமாகவும் அதற்கு அருகே வீரமுத்து தூக்கில் தொங்கியபடி சடலமாகவும் கிடந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீரமுத்துவின் தாயார் லட்சுமி மற்றும் வீரமுத்துவின் மூன்று குழந்தைகள் கண்ணீர்விட்டு கதறியுள்ளனர். பின்னர் அருகே உள்ள வீட்டினரின் உதவியுடன் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செம்பட்டிவிடுதி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு கொலை செய்யப்பட்ட ராஜேஸ்வரியின் சடலத்தையும் தற்கொலை செய்து கொண்ட வீரமுத்துவின் சடலத்தையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மனைவி மீது சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்ததுடன் கணவனும் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு பிறந்த மூன்று குழந்தைகள் தற்பொழுது தாயையும் தந்தையையும் இழந்து நிற்கதியாய் நிற்பது பார்ப்பவர்களை வேதனடைய செய்துள்ளது.