6 கிராம் நகைக்காக மூதாட்டி கொலை! உடலை முட்புதரில் வீசி சென்ற கொடூரம்

 
ச் ச்

சுங்குவார்சத்திரம் அருகே ஆறு கிராம் நகைக்காக மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி ராணி (70). இவர் அதே பகுதியில் சாலையோரம் போண்டா பஜ்ஜி வேர்க்கடலை போன்றவற்றை விற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.  இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி,  சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள முட்புதரில் ராணி சடலமாக கிடந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து சுங்குவார்சத்திரம் போலீசார் ராணியின் சடலத்தை கைப்பற்றினர். அப்போது கழுத்து கண்களில் காயம் இருந்தது. அதேபோல அவர் அணிந்திருந்த நகைகளும் திருடப்பட்டு இருந்தது.  இதனால் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் மூதாட்டி கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது போலீசாருக்கு தெரியவந்தது.  தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சிசிடிவி காட்சிகளில் பதிவான நபர் குறித்து விசாரித்து பாப்பான்குழி கிராமத்தைச் சேர்ந்த முருகன் (49) என்பவனை கைது செய்து போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.  இதில் அவர் மூதாட்டியை கழுத்தை நெறித்து கொலை செய்ததுடன் கண்களில் மிளகாய் பொடியை தூவி விட்டு அவர் அணிந்திருந்த 6 கிராம் நகையை திருடி சென்றதை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து முருகனிடம் விசாரித்ததில் அவர் அருகிலுள்ள கேண்டினில் மினி சரக்கு வாகனத்திற்கு டிரைவராக வேலை செய்து வந்ததும், இவருக்கு கடன் தொல்லை அதிகரித்ததால் நகைக்காக திட்டமிட்டு ராணியை கொலை செய்தது தெரியவந்துள்ளது.  திருடப்பட்ட நகையை சுங்குவார்சத்திரம் பஜாரில் உள்ள சுகன் நகை அடகு கடையில் அடமானம் வைத்து பணம் பெற்றதையும் போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் நகைக்கடை உரிமையாளர் , மற்றும் முருகனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.