பெண் சாவில் திடுக்கிடும் திருப்பம்- உறவினர்களே கழுத்தை நெரித்துக் கொன்றது அம்பலம்
பர்கூர் அருகே பெண் சாவில் திடுக்கிடும் திருப்பமாக சொத்து பிரச்சினையில், உறவினர் உள்பட 3 பேர் கட்டையால் அடித்தும், கழுத்தை நெறித்து கொன்றது அம்பலமாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அருகே மேல்சீனிவாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் 55 வயதான கோவிந்தம்மாள். இவருக்கு 4 பிள்ளைகள் உள்ள நிலையில், அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கோவிந்தம்மாளின் கணவர் முருகன், கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். இதனால் தனது மகனான மணிகண்டன் வீட்டில் தங்கி மாடுகளை மேய்ச்சலுக்காக அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து செல்வதும், 100 நாள் ஏரி வேலைக்கு செல்வதுமாக இருந்துள்ளார் கோவிந்தம்மாள்.
இந்நிலையில், கடந்த 25ம் தேதியன்று மாலை, கோவிந்தம்மாள் ஏரி வேலையை முடித்துவிட்டு, தனது மாடுகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்வதாக அங்கிருந்த சக வேலையாட்களிடம் கூறி விட்டு சென்றுள்ளார். பின்னர் மாலை 7 மணியாகியும் தனது தாய் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த மணிகண்டன், உறவினர்களுக்கு போன் செய்து அம்மா அங்கு வந்தார்களா? என விசாரித்துள்ளார். இதையடுத்து, கோவிந்தம்மாள் வேலை பார்த்த இடத்திற்கும் சென்று தேடியுள்ளார். பின்னர் மாடு மேய்ந்த இடங்களில் சென்று பார்த்தபோது, காட்டுப் பகுதிக்குள் இறந்த நிலையில் கோவிந்தம்மாள் இருப்பதை கண்டு மணிகண்டன், கதறி துடித்துள்ளார். அப்போது அந்த பகுதியில் இருந்த உறவினகளும் அங்கு வந்து பார்த்தபோது, கோவிந்தம்மாளின் காதில் இருந்த அரை சவரன் தங்க கம்மல் கழட்டப்பட்டிருந்ததும், காதில் காயமிருந்ததும், அதே போல் காலில் இருந்த வெள்ளிக் கொழுசும் கழட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது.
உடனடியாக பர்கூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பர்கூர் டி.எஸ்.பி., முத்துகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார், கோவிந்தம்மாளின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மகன் மணிகண்டன் அளித்த புகாரின் பெயரில் பர்கூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடந்து தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்த செல்போன் சிக்னலை வைத்து போலீசார் குற்றவாளியை தேடிவந்தனர். ஆனால் அப்போது அதிகமான செல்போன் சிக்னல்கள் இருந்ததால் குற்றவாளியை கண்டறிவதில் தொய்வு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர், சில நாட்களுக்கு பின், 3 நபர்களின் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கொலை செய்யப்பட்ட கோவிந்தம்மாளின் கணவர் முருகன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துள்ளார். அவர் இறப்பதற்கு முன்பாக , தனது 57 சென்ட் நிலத்தை சுப்பிரமணி என்பவருக்கு ஒப்பந்தம் போட்டு கொடுத்து பணம் பெற்றிருந்துள்ளார். இந்த நிலையில் அந்த நிலத்தை சுப்பிரமணியிடம் இருந்து முருகனின் அண்ணன் மகன் சக்திவேல் வாங்கியுள்ளார். தங்களின் நிலத்தை உறவினரான சக்திவேல் வாங்கி விட்டாரே என கோவிந்தம்மாள் அடிக்கடி அவரிடம் தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் சக்திவேல் புதிய வீடு கட்டி குடி புகுந்துள்ளார். அப்போது அங்கு சென்ற கோவிந்தம்மாள் சக்திவேலையும் அவருக்கு ஆதரவாக பேசிய உறவினர்களான மேல் சீனிவாசபுரத்தை சேர்ந்த வெங்கட்ராமன் (65), கோவிந்தராஜ் (64) ஆகியோரையும் தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இது அவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் கோவிந்தம்மாளை தீர்த்து கட்ட முடிவு செய்தனர். அதன்படி ஏரி வேலைக்கு சென்று திரும்பிய கோவிந்தம்மாளை சக்திவேல், வெங்கட்ராமன், கோவிந்தராஜ் ஆகிய 3 பேரும் சேர்ந்து கட்டையால் அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் அவரது செல்போன், கால் கொலுசு, காதில் இருந்த அரை சவரன் தங்க கமல் ஆகியவற்றை எடுத்து அந்த பகுதியில் இருந்த குட்டையில் வீசியுள்ளனர். அப்போது தான் இந்த கொலை நகைக்காக நடந்தது என நம்புவார்கள் என இவ்வாறு செய்துள்ளனர். இதையடுத்து சக்திவேல், வெங்கட்ராமன், கோவிந்தராஜ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


