ஆடு, கோழி வளர்ப்பதில் தகராறு- அக்காவை வெட்டிக் கொன்ற தம்பி

விருதுநகர் ஆத்து மேடு பகுதியில் பெண்ணை அவரது சகோதரர் அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் ஆத்து மேடு பகுதியைச் சேர்ந்தவர் திருமணி(44). இவரது கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் திருமணி அவரது தம்பி பெரியசாமி(42) வீட்டு அருகே உள்ள காலி இடத்தில் தரை வாடகைக்கு எடுத்து செட் போட்டு ஆடு கோழிகளை வளர்த்து வருகிறார். தனது வீட்டு அருகில் ஆடு, கோழிகளை வளர்க்க கூடாது என்றும் அந்த இடத்தை காலி செய்து வேறு இடத்தில் சென்று நடத்துமாறும் பெரியசாமி தனது அக்கா திருமணியிடம் அடிக்கடி கூறி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் புதனன்று இரவும் இதேபோல் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது கடும் ஆத்திரமடைந்த பெரியசாமி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அக்கா திருமணியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் திருமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். திருமணியின் சடலத்தை கைப்பற்றி உடற் கூறு ஆய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.