பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்த மகன்!
பண்ருட்டியில் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையான மகன் மதுபோதையில் பெற்ற தாயை தாக்கி கொலை செய்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் ராஜலட்சுமி (60).இவருடைய கணவர் டேவிட் உயிரிழந்த நிலையில் விஜய் (28) மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் விஜய் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானதால் அடிக்கடி போதையில் வந்து தாய் ராஜலட்சுமி மற்றும் பாட்டி மல்லிகா மனநிலை பாதிக்கப்பட்ட சகோதரனையும் தாக்கி ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராஜலட்சுமி தனது தாய் வீடான வேலூரில் கடந்த வாரம் சென்று தங்கி வந்துள்ளார். நேற்று இரவு வீட்டுக்கு வந்த ராஜலட்சுமியிடம் நள்ளிரவில் மது போதையில் வந்த விஜய் மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்பொழுது ஆத்திரமடைந்த விஜய் வீட்டில் இருந்த மைக்ரோ ஓவனை தூக்கி ராஜலட்சுமி தலையில் போட்டு கொலை செய்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த ராஜலட்சுமி உடலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாட்டி மல்லிகா, உடனே பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அடிப்படையில் போலீசார் உயிரிழந்த ராஜலட்சுமி உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விஜயை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற தாயை மதுபோதையில் கொடூரமாக கொலை செய்த மகனால் பண்ருட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


