அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்! தலைமை ஆசிரியர் உடந்தை?
விளாத்திகுளம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்ற ஹென்றி(41) புதூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்போது இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த ஆசிரியர் தியாகராஜன் மீது அப்பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவிகள், தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளித்த புகாரின் பேரில், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அரசுப்பள்ளி ஆசிரியர் தியாகராஜன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததோடு, தலைமறைவான ஆசிரியர் தியாகராஜனை தீவிரமாக தேடி வருகின்றனர். அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த புகாரை அலட்சியப்படுத்திய புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் பெண் தலைமை ஆசிரியர் அன்னை சீபா ஃபிளவர் லைட்(51) மீதும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


