பாலத்தின் கீழ் கிடந்த சூட்கேசில் இளம்பெண்ணின் சடலம்!
சங்ககிரி அருகே சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை பாலத்தின் கீழ் ட்ராவல் சூட்கேசில் அழுகிய நிலையில் இளம்பெண்ணின் சடலத்தை சங்ககிரி போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சேலத்திலிருந்து கோவை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆவரங்கம்பாளையம் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தையொட்டி செல்லும் சர்வீஸ் சாலையின் ஓரத்தில் சிறிய பாலத்தின் கீழ் தூர் நாற்றம் வீசி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் வைகுந்தம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயகுமாருக்கு தகவல் அளித்துள்ளனர். இது குறித்து சங்ககிரி போலீஸில் புகார் செய்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தலைமையிலான DSP ராஜா, காவல் ஆய்வாளர்கள் காத்திகேயினி, பேபி, செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பாலத்திற்கு கீழ் சூட்கேஸில் ஒரு இளம்பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண்ணை வேறு எங்காவது கொலை செய்து இங்கு கொண்டு வந்து வீசி சென்றிருக்கலாம் என்றும், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணிற்கு சுமார் 20 வயது முதல் 30 இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் உடலை உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.