நகைக்காக பக்கத்து வீட்டு மூதாட்டியை கழுத்தறுத்து கொன்ற இளைஞர்

 
murder

வேதாரண்யம் அருகே மூதாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்த பக்கத்து வீட்டு இளைஞர் கைது செய்யப்பட்டார்.

murder

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த மருதூர் வடக்கு வழியன் செட்டி கட்டளை பகுதியில் வசித்து வந்தவர் நாகம்மாள். இவர் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இரு மகள்களுக்கும்  திருமணமாகிவிட்டது . மகன் ராஜா வெளிநாட்டில் வேலை செய்கிறார். மருமகள் தமிழரசி மற்றும் இரண்டு பேரக் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் காலை அவரது வீட்டின் எதிரே உள்ள தைல மர தோப்பில் நாகம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இது குறித்து கரியாப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாகம்மாள் அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் கபிலன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தினார்.


இந்த நிலையில் நேற்று இதே ஊரைச் சேர்ந்த முருகேசன் மகன் ராசா கண்ணு (30) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் வறுமையின் காரணமாக பாட்டியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து கரியாப்பட்டினம் போலீசார் ராசாக்கண்ணுவை கைது செய்தனர்.