19 வயது இளைஞரை கொலைக்காரனாக்கிய தாயின் கள்ளக்காதல்!

காரியாபட்டி அருகே தாயுடன் கள்ளத்தொடர்பில் இருந்த நபரை நண்பருடன் சேர்ந்து சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம், மல்லாங்கிணறு அருகே உள்ள கீழத்துலுக்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (35 ), இவர் பி.எட் முடித்து கீழத்துலுக்கன்க்குளம் காட்டுப்பகுதியில் நேற்று மாலை ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர் கத்தி குத்து காயங்களுடன் கீழே கிடந்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இது குறித்து மல்லாங்கிணர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மல்லாங்கிணறு போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து படுகாயத்துடன் கிடந்த ராஜேந்திரனை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து மல்லாங்கிணர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ராஜேந்திரனுக்கு திருமணம் ஆகி 3 நாட்களில் அவரது மனைவி பிரிந்து சென்று விவாகரத்து ஆன நிலையில் இரண்டு ஆண்டுகளாக இதே ஊரைச் சேர்ந்த மகாலட்சுமி தனது கணவரை இழந்த நிலையில் தனிமையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் ராஜேந்திரனும், மகாலட்சுமியும் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக மகாலட்சுமி மகன் பிரபாகரன் (19) என்பவர் ராஜேந்திரனை பல முறை கண்டித்துள்ளார். எதையும் கேட்காமல் மீண்டும் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த பிரபாகரன் மற்றும் அவரது பள்ளி நண்பர் மல்லாங்கிணறு வி.வி.வி நகரைச் சேர்ந்த ராஜா (19) என்பவரும் சேர்ந்து நேற்று கீழத்துலுக்கன்குளம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ராஜேந்திரனை கத்தியால் பல இடங்களில் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டதாக கொலையாளிகள் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் ராஜேந்திரனை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து தலைமறைவான பிரபாகரன், ராஜா ஆகிய இருவரையும் அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி மதிவாணன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தாயுடன் கள்ளத்தொடர்பில் இருந்த நபரை மகன் நண்பனை வைத்து கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் கொலை செய்து தலைமறைவான இரண்டு இளைஞர்களை 24 மணி நேரத்திற்குள் கைது செய்து சிறையில் அடைத்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிகிறது.