நம்பி வீட்டுக்கு சென்ற வாலிபர்- திட்டம்போட்டு தீர்த்துக்கட்டிய கள்ளக்காதலி

சிவகாசி அருகே கள்ளக்காதலியுடன் இருந்த வாலிபர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் ஆலாவூரணியை சேர்ந்தவர் சுரேஷ் (27). இவர் மீது காவல் நிலையங்களில்3- கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையிலுள்ளன. ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மனைவி குழந்தைகளைப் பிரிந்த சுரேஷ், திருமணமாகி கணவரை பிரிந்து வாழும் சுந்தரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் முனீஸ் நகரில் வாழ்ந்து வந்தனர். கடந்த 16-ம் தேதி இரவு சுந்தரியுடன் முனீஸ் நகர் வீட்டில் சுரேஷ் தங்கியிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் சுரேஷை ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியது.
இச்சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட சுரேஷ் கடந்த 2024-ம் ஆண்டு திருத்தங்கல் நெல்லுகுத்துப்பாறை பகுதியை சேர்ந்த குணசேகரன் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளி வந்தவர் என்பது தெரியவர, அந்த கொலைக்கு பழிக்குப் பழியாகவே வாலிபர் சுரேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியதென தெரியவந்தது. கடந்த வருடம் ஏற்கனவே கொலையுண்ட குணசேகரனின் சகோதரர் மதனகோபால் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து சுரேஷை பழிக்குபழியாக கொலை செய்துள்ளதை போலீசார் உறுதி செய்தனர். விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் மதனகோபால் ( வயது23) மற்றும் அவரது நண்பர்களான தனசேகரன் ( வயது23), சூர்யபிரகாஷ் ( வயது19), தருண் ( வயது23), முத்துப்பாண்டி ( வயது23) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
கைதான 5 பேரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், திருத்தங்கல்லில் கடந்த வருடம் ஏற்கனவே நடந்த குணசேகரன் கொலைக்கு பழிக்குப்பழியாக சுரேஷ் கொலை செய்யப்பட்டதும், இந்த கொலைக்கு சுரேஷின் கள்ளக்காதலியான சுந்தரி, அவரது ஆண் நண்பர் வேலுச்சாமி ஆகியோர் உதவியதும் தெரியவந்தது. இதனையடுத்து சுந்தரி, அவரது ஆண் நண்பர் வேலுச்சாமி ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொலையை அரங்கேற்றிய சம்பவம் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு சதித்திட்டங்களை தீட்டியது அம்பலமாகி வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது.
சுந்தரிக்கு சுரேஷ் மட்டுமின்றி வேலுச்சாமி மற்றும் கைதான தருண் ஆகியோருடனும் தொடர்பு இருந்துள்ளதும், சுரேஷ் அடிக்கடி சுந்தரி வீட்டிற்கு வந்து செல்வதால் வேலுச்சாமி, தருண் ஆகியோருடன் சுந்தரி சந்தோஷமாக இருக்க முடியாத ஆத்திரத்தில் இருந்துள்ளார். எனவே சுரேசை மூவரும் தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். இதற்காக சுரேஷின் எதிரியான மதனகோபால் கும்பலுடன் வேலுச்சாமி தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். இதேபோல் தருணும் , சுரேஷ் வீட்டிற்கு வந்தால் சரியான நேரத்தில் தகவல் தெரிவிக்கும்படி சுந்தரியிடம் கூறியிருந்தார். இதன்படி சம்பவ நாளன்று அதிக மது போதையில் சுந்தரியின் வீட்டிற்கு சுரேஷ் வந்ததை தருணுக்கு தகவல் தெரிவித்ததுடன், வேலுச்சாமிக்கும், சுந்தரி தகவலை கூறியுள்ளார். சுரேஷ் சுந்தரி வீட்டிலி ருப்பதை உறுதி செய்து கொண்ட மதனகோபால் கும்பல் உடனடியாக ஆயுதங்களுடன் சுந்தரியின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து போதையி லிருந்த சுரேஷை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது. பழிக்குபழியாக நடந்த கொலை சம்பவத்தில் போலீசாரால் ஏற்கனவே 5 பேர்கள் கைது செய்யப்பட்ட பட்சத்தில், கொலையுண்டவரின் கள்ளக்காதலியும், தனது கள்ளக்காதலன் வேலுச்சாமியுடன் கைதாகியுள்ளது கொலை வழக்கில் திருப்பத்துடன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட 7- நபர்களையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்தனர்.