இன்ஸ்டா காதலனை நம்பி வீட்டைவிட்டு வெளியே சிறுமிக்கு நேர்ந்த சோகம்
நெல்லை சிறுமியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராமநாதபுரம் வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பள்ளி படிப்பை தற்போது முடித்துள்ள நிலையில், இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராமநாதபுரம் கஞ்சிரங்குடி பகுதியைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் மாதேஸ்வரன் (வயது 21) என்பவர் அறிமுகமானார். சில நாட்களாக இருவரும் செல்போனில் பேசி வந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன்பு சிறுமி திடீரென வீட்டில் இருந்து மாயமானார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் அளித்தனர்.
காவல்துறையினர் சிறுமி மாயம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கஞ்சிரங்குடி பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் என்பவர் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து காவல் துறையினர் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்திய நிலையில் மாதேஸ்வரன் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து மாதேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


