எலிபேஸ்ட் கொடுத்தும் சாகல! கள்ளக்காதலன் மூலம் கணவனின் கதையை முடித்த மனைவி
கோவை வடவள்ளி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி மற்றும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அவரது ஆண் நண்பரை போலீசார் கைது செய்தனர்.
கோவை வடவள்ளி சோமையம்பாளையம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பாளையம் பிரிவை சேர்ந்தவர் பிரபு (40). இவர் லேத் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி லாவண்யா (36). இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும் லாவண்யா கவுண்டர்மில்ஸ், சுப்பிரமணியபாளையம் பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் பிரபு கடந்த சில தினங்களாக உடல் நலக் குறைவுடன் இருந்த நிலையில் சனிக்கிழமை திடீரென உயிரிழந்ததாக, மனைவி லாவண்யா பிரபுவின் தாயார் கலாவதிக்கு செல்போனில் அழைத்து கூறியுள்ளார்.
வீட்டிற்கு வந்து பார்த்தபோது பிரபுவின் கழுத்தில் சில தழும்புகள் இருந்ததால், கலாவதி தனது மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் பிரபு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் மனைவி லாவண்யாவை போலீசார் பிடித்து விசாரித்த போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சம்பவதன்று சுமார் மதியம் 12 மணியளவில் ஒரு நபர் அவரது வீட்டிற்குள் வந்து சென்றதும், அதன் பின்னர் லாவண்யா அங்கு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் லாவண்யாவிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில் கணவர் பிரபுவை தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் லாவண்யா உணவகத்தின் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வரும் கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்த பைரவ் கௌடா (39) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதும், அடிக்கடி கடையில் ஒன்றாக இருந்த வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டதும் தெரியவந்தது. இதற்கு இடையூறாக இருந்த பிரபுவை கொலை செய்ய திட்டமிட்டு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு லாவண்யா கணவர் பிரபுவிற்கு சாம்பாரில் எலி பேஸ்ட் விஷத்தை கலந்து கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பிரபு வேறு ஏதோ காரணம் என நினைத்து மருத்துவ சிகிச்சை எடுத்து வந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் பிரபு பிழைத்துக் கொண்டதால் சனிக்கிழமை மதியம் பைரவ் கவுடா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வந்து பிரபுவின் கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து எதுவும் தெரியாதபோல் லாவண்யா அங்கு வந்து மூச்சு திணறல் ஏற்பட்டு கணவர் இறந்ததாக கூறி நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து லாவண்யா மற்றும் பைரவ் கவுடா இருவரையும் கைது செய்த வடவள்ளி போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். ஆண் நண்பரை திருமணம் செய்ய மனைவியே கணவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.