காய்கறி வெட்டும் கத்தியால் கணவனை குத்திக் கொன்ற மனைவி கைது
பாபநாசம் வட்டம் கபிஸ்தலம் அருகேகாய்கறி வெட்டும் கத்தியால் கணவனை குத்திக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.

கும்பகோணம் அடுத்த பாபநாசம் வட்டம் கபிஸ்தலம் அருகே எருமைப்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் கலியமூர்த்தி (45).இவரது மனைவி சிந்தனைச் செல்வி (25). இவர்களுக்கு கனிஷ்கா (09) மற்றும் சிவகார்த்திகேயன் (07) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கலியமூர்த்தி மற்றும் சிந்தனைச் செல்விக்கு 10-ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் மனைவியிடம், கணவன் அடிக்கடி குடிபோதையில் சண்டையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம் போல நேற்று இரவும் கலியமூர்த்தி அவரது மனைவியை குடிபோதையில் தகாத வார்த்தைகள் கூறி திட்டியும், அடித்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது ஆத்திரம் அடைந்த அவரது மனைவி சிந்தனைச்செல்வி அங்கிருந்த காய்கறி வெட்டும் கத்தியால் கணவன் கலியமூர்த்தியின் இடது கழுத்தில் குத்தியுள்ளார். அதிகப்படியான ரத்தம் வெளியேறியதால் கலியமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து உயிரிழந்த கலியமூர்த்தியின் தாயார் கமலம்பாள் (65) கபிஸ்தலம் காவல் நிலையத்தில் மருமகள் மீது புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கபிஸ்தலம் காவல் நிலையத்தார் கலியமூர்த்தியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கணவரை கத்தியால் குத்திய மனைவி சிந்தனை செல்வியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.


