கள்ளக்காதலை கண்டித்த கணவனை காதலன் மூலம் கொலை செய்த மனைவி
திருமணத்திற்கு புறம்பான உறவை தடுத்த கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள குளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (32). இவரது மனைவி அபிராமி (வயது 26). இவர்களுக்கு 9 மற்றும் 6 வயதில் இருமகன்கள் உள்ளனர். வையம்பட்டியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபானக் கூடத்தில் ஊழியராக உள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 12 ம் தேதி குளத்துப்பட்டியில் சாலையோரம் உள்ள ஒரு புளிய மரத்தடியில் இறந்து கிடந்துள்ளார். தகவலின் பெயரில் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சென்று பார்த்து இறந்து போன பிரபாகரன் உடலை அவரது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். பிரபாகரன் முகம் மற்றும் கழுத்தில் காயங்கள் இருந்ததையடுத்து உறவினர்கள் சந்தேகமடைந்தனர். அவர்களது வலியுறுத்தலின்பேரில் கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அபிராமி புத்தாநத்தம் போலீசில் கொடுத்த புகார் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அபிராமிக்கும் அவரது உறவினரான பப்லு என்ற பிரபு என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்த நிலையில், அதனை பிரபாகரன் கண்டித்து வந்ததாக தெரியவந்தது. இதனால் கடந்த 12ம் தேதி வேலைக்குச் சென்று வீட்டுக்கு திரும்பிய பிரபாகரனிடம் நைசாக பேசிய பிரபு மற்றும் சரவணன் ஆகியோர் அவரை அழைத்துச் சென்று அளவுக்கு அதிகமாக மது அருந்த வைத்து சுயநினைவு இல்லாமல் அதீத போதையில் இருந்தவரை கழுத்தை இழுக்கி கொலை செய்து மரத்தடியில் உடலை போட்டுச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய அபிராமி மற்றும் சரவணன் ஆகிய இருவரையும் புத்தாநத்தம் போலீசார் கைது செய்தனர். மணப்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அபிராமி திருச்சி பெண்கள் சிறையிலும் சரவணன் புதுக்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் பப்லு என்ற பிரவுவை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று திருச்சி, எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த பப்லு என்ற பிரபு (வயது 42) மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். கைது செய்யப்பட்ட பப்லு என்ற பிரபு, சரவணன் ஆகிய இருவருக்கும் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை மற்றும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன.

