ஓசியில் மீன் தராததால் ஆத்திரம்... பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை
கிருஷ்ணகிரி அருகே மீன் கடை நடத்தி வந்த பெண்ணின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் அருகே நாசாகால்கொட்டாய் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி நஞ்சம்மாள் (41). இவர் காவேரிப்பட்டிணம் அருகே திம்மாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் மீன் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை, இவர் கடையில் இருந்த போது அங்கு வந்த ஒருவர் இவருடன் தகராறு செய்தார். சிறிது நேரத்தில் அவர் கருங்கல்லை தூக்கி நஞ்சம்மாள் தலையில் போட்டார். இதில் நஞ்சம்மாள் துடிதுடித்து இறந்தார். இந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் நஞ்சம்மாள் இறந்து கிடந்ததை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது குறித்து காவேரிப்பட்டிணம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நஞ்சம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் நேற்று முன்தினம் இரவு சுண்டேகுப்பத்தை சேர்ந்த தொழிலாளி மாரியப்பன் (35) என்பவர் மீன் கடைக்கு வந்து சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் பிடித்து விசாரித்த போது அவர் நஞ்சம்மாளின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து மாரியப்பனை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில்.., ஓசியில் மீன் சாப்பிட்டேன். எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. நான் இரவு மது குடித்து விட்டு நஞ்சம்மாளின் கடைக்கு சென்று மீன் சாப்பிட்டேன். பணம் கொடுக்காமல் வந்ததால் என்னை அவர் திட்டினார். இதனால் நானும் அவரிடம் தகராறு செய்தேன். பின்னர் இரவு சென்று விட்டேன். அதிகாலை 5 மணி அளவில் நான் மது குடிப்பதற்காக நஞ்சம்மாளின் கடை பக்கமாக வந்தேன். அந்த நேரம் அவர் அங்கிருந்த கட்டையால் என்னை அடித்து விரட்டினார். இதனால் நான் ஆத்திரத்தில் அங்கிருந்த கருங்கல்லை தூக்கி நஞ்சம்மாள் தலையில் போட்டு கொன்று விட்டேன் என வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.


