கள்ள உறவில் இருந்தவரை பெட்ரோல் ஊற்றி கொன்ற பெண்
திருப்பூரில் மர அறுப்பு ஆலை குத்தகைதாரரை செல்போன் பவர் பேங்கால் பின் மண்டையில் தாக்கி பெட்ரோல் ஊற்றி எரித்து இரவில் கொலை செய்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வள்ளுவர் வீதி பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பராஜ் (63). அவிநாசி சிந்தாமணி தியேட்டர் பகுதியில் மர அறுப்பு ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர். சின்னப்பராஜிற்கு பல பெண்களுடன் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல, அவிநாசியை அடுத்து நடுவச்சேரி பகுதியில் தனியாக வசித்து வரும் கூலித் தொழிலாளியான கூடலூர் பகுதியைச் சேர்ந்த பூமணி (42) என்ற பெண்ணுடன் சின்னப்பராஜிற்கு தகாத உறவு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. சின்னப்பராஜ் பிற பெண்களுடன் தொடர்பில் இருப்பது குறித்து இவர்கள் இருவருக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு காரணமாக சண்டை வந்துள்ளதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல அவிநாசியை அடுத்து சின்னேரிபாளையம் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையின் ஓரம் இருந்த தடுப்புச் சுவரின் மீது இருவரும் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மிகுந்த ஆத்திரம் அடைந்த பூமணி, தான் கொண்டு வந்திருந்த செல்போன் பவர் பேங்கால் சின்னராஜ்ஜின் பின் மண்டையில் கடுமையாக தாக்கியுள்ளார். அதனால், நிலை தடுமாறிய சின்னப்பராஜின் மீது தான் ஏற்கனவே திட்டமிட்டு கேனில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை ஊற்றியுள்ளார். பதற்றம் அடைந்த சின்னராஜ் தப்பி ஓட முயன்ற போது, உடனே அவர் மீது தீ வைத்துள்ளார் பூமணி. ஏற்கனவே தலையில் பட்ட காயத்தால் நிலை குலைந்த சின்னப்பராஜ் உடலில் தீப்பற்றி பாதி எரிந்த நிலையில் சாலையோரம் இருந்து பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து பூமணி தனது வீட்டுக்கு சென்று விட்டு, இன்று அதிகாலை அவிநாசி காவல் நிலையத்தில் சரணடைந்து நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவிநாசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது, பூமணி சொன்னது உண்மை என்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


