பாலியல் உறவுக்கு வர மறுத்ததால் ஆத்திரம்- நடுரோட்டில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட பெண்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த யாசகம் பெரும் பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்த பொது அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த மற்றொரு யாசகரை காவல்துறையினர் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த யாசகர் குழுவினர் யாசகம் பெறுவதற்காக அப்பகுதியிலேயே தங்கி யாசகம் பெற்றுக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படி யாசகம் பெறும் யாசகர்கள் தங்க இடம் இல்லாமல் கடந்த 2ம் தேதி இரவு பொன்னமராவதி மருத்துவமனை அருகே சாலையோரத்தில் தங்கியுள்ளனர். அந்த குழுவில் இருந்த அடையாளம் தெரியாத ஒரு பெண் இறந்து கிடப்பதாக பொன்னமராவதி கிராம நிர்வாக அலுவலர் பச்சையப்பன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க உடலை கைப்பற்றிய பொன்னமராவதி காவல்துறையினர் உடற்கூறு ஆய்வு செய்து அந்த பெண் சடலத்தை அடக்கம் செய்தனர். இந்நிலையில் தான் உடற்கூறு ஆய்வு முடிவில் அடையாளம் தெரியாத பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போது போலீசார் விசாரணையில் திருச்சி மாவட்டம் ஆவூரைச் சேர்ந்த நூர்ஜஹான் என்ற பெண்ணை யாசகர் குழுவில் இருந்த மற்றொரு யாசகரான சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 61 வயதான சதீஷ்குமார் என்பவர் இரவில் பாலியல் உறவுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு நூர்ஜஹான் மறுப்பு தெரிவிக்கவே நூர்ஜஹானை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக சதீஷ்குமார் ஒப்புக்கொண்டுள்ளார். இதனை அடுத்து சதீஷ்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்த பொன்னமராவதி காவல்துறையினர் கைது செய்து சதீஷ்குமாரை சிறையில் அடைத்தனர்.


