இன்று இரவு கருட சேவை - திருப்பதியில் குவியும் பக்தர்கள்..

 
இன்று இரவு கருட சேவை - திருப்பதியில் குவியும் பக்தர்கள்..

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை இன்று இரவு நடைபெற உள்ளதால்,  பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கியது. அதன்பிறகு ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை  நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.  பிரம்மோற்சவத்தின் 5வது நாளான நேற்று  ஏழுமலையான் சர்வ பூபால வாகனத்தில் நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  இன்று காலை மோகினி வாகனத்தில் மாடவீதிகளில் உலா வந்தார்.   அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த  நிலையில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை  இன்று இரவு நடைபெறுகிறது.  7 மணிக்கு தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் மாட வீதிகளில் உலா வர இருக்கிறார்.

திருப்பதி

இதனைக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.  சுமார் 3 லட்சம் பக்தர்கள் கருட சேவையை தரிசிக்க வருவார்கள் என்பதால், தேவஸ்தானம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.  இந்த ஆண்டு தென்மேற்கு வாசல், வடமேற்கு வாசல்,  வடகிழக்கு வாசல் ஆகிய பகுதிகளில்  ஆரத்தி காண்பிக்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.   ஆரத்தி வழங்கும் நேரத்தில் 5 பேருக்கு தரிசனம் கொடுக்க முடியும் என்பதால்,  இந்த ஆண்டு ஆரத்திகளை ரத்து செய்து ,  ஒவ்வொரு ஆரத்தி தளத்திலும் 10,000  பேருக்கு  கருட சேவையை காண  வாய்ப்பு  ஏற்படுத்தப்பட்டுள்ளது.  

இன்று இரவு கருட சேவை - திருப்பதியில் குவியும் பக்தர்கள்..

இதனையொட்டி  பாதுகாப்பு பணிகளுக்காக 5,000  போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  2,300 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.  திருப்பதி மலைப்பாதையில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி வரையில் இருசக்கர வாகனத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  டாக்டர்களின் வசதிக்காக திருப்பதியில் இருந்து  சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.  அத்துடன் பக்தர்களுக்கு நள்ளிரவு வரை இலவசமாக அன்ன பிரசாதம் வழங்கப்பட உள்ளது. 4 மாட வீதிகளிலும்  பிரசாதம் வழங்க தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.