திருப்பதியில் நவ.1 முதல் டைம் ஸ்லாட் டோக்கன் - தேவஸ்தானம் அறிவிப்பு..

 
திருப்பதி கோவில்

திருப்பதியில் நவம்பர் 1ம் தேதி முதல் மீண்டும் ‘டைம் ஸ்லாட்’ டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

திருப்பதி திருமலையில் உள்ள அன்னமய பவனில் நேற்று  தேவஸ்தான முதன்மைச் செயலாளர்  ஏ.வி.தர்மாரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “திருமலை-திருப்பதி தேவஸ்தானம் இந்த ஆண்டு (2022) ஏப்ரல் மாதம் 12-ந்தேதி திருப்பதியில் இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரணப் பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட (டைம் ஸ்லாட் டோக்கன்) தரிசன டோக்கன் வழங்கும் முறையை நிறுத்தியது. எனினும், பக்தர்களின் வசதிக்காக கடந்த அறங்காவலர் குழு கூட்டத்தின்போது, பக்தர்களுக்கு மீண்டும் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட (டைம் ஸ்லாட்) டோக்கன்கள் வழங்க முடிவு செய்தது. அதன்படி நவம்பர் மாதம் 1-ந்தேதியில் இருந்து மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன்கள் தினமும் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

திருப்பதி

அந்த டோக்கன்கள் திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம் மற்றும் ரெயில் நிலையம் அருகில் உள்ள கோவிந்தராஜசாமி சத்திரம்-2 ஆகிய இடங்களில் வழங்கப்பட உள்ளது. அதற்காக அனைத்து வசதிகளுடன் கூடிய கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாரத்தில் சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்படும். செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 15 ஆயிரம் டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும். மேற்கண்ட நாளில் பக்தர்களின் வருகையை பொருத்து டைம் ஸ்லாட் டோக்கன் வினியோகிக்கும் எண்ணிக்கையை அதிகரித்தும், குறைத்தும் வழங்கப்படும். டைம் ஸ்லாட் டோக்கன்களின் ஒதுக்கீடு அன்றைய தினம் தீர்ந்து விட்டால், பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வளாகம் 2-க்கு சென்று சாமி தரிசனத்துக்காக தங்கள் முறை வரும் வரை காத்திருக்கலாம்.

திருப்பதியில் நவ.1 முதல் டைம் ஸ்லாட் டோக்கன் - தேவஸ்தானம் அறிவிப்பு..

மேலும் சாதாரணப் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கும் வகையில், சோதனை அடிப்படையில் வி.ஐ.பி. தரிசன நேரத்தை வரும் டிசம்பர் மாதம் 1-ந்தேதி முதல் காலை 8 மணியாக மாற்ற அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. இது மிகவும் பொதுவான பக்தர்களுக்கு தரிசன வசதிக்கு பயனளிக்கும் மற்றும் தங்குமிடத்தின் மீதான பிரச்சினையை குறைக்கும். ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் ஸ்ரீவாணி டிக்கெட் வைத்திருக்கும் பக்தர்களுக்கு திருப்பதியில் உள்ள மாதவம் ஓய்வு இல்லத்தில் தங்குமிடம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்..