பெங்களூருக்கு ரயிலில் கடத்தமுயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்... 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது

 
ration rice

ஜோலார்பேட்டை அருகே ரயில் மூலம் பெங்களூருக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், இதுதொடர்பாக 3 பெண்கள் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

திருப்பத்துர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் ரத்தினகுமார், உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒன்றாவது நடைமேடையில் சிலர் ரேஷன் அரிசி மூட்டைகளை, ஜோலார்பேட்டையில் இருந்து பெங்களூரு நோக்கி செல்லும் மெமு பயணிகள் ரயிலில் ஏற்றியது தெரிய வந்தது. இதனை அடுத்து, அங்கு சென்ற ரயில்வே போலீசார், ரேஷன் அரிசி மூட்டைகளை சட்ட விரோதமாக கடத்த முயன்ற 3 பெண்கள் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

ration rice

அவர்களிடம் இருந்து பெங்களூருவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கைதானவர்களிடம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் சோமநாயக்கன்பட்டியை சேர்ந்த சதீஷ் (26), பச்சூர் பாறையூரை சேர்ந்த ஜெயா(36), திருஆலம் பகுதியை சேர்ந்த சசிகலா (61), இடையம்பட்டியை சேர்ந்த பூங்கொடி (37) என்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவர்கள் திருப்பத்தூர் உணவு பொருள் கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.