கோவையில் காணாமல் போன ரூ.19 லட்சம் மதிப்பிலான 104 செல்போன்கள் மீட்பு!

 
cbe

கோவை மாவட்டத்தில் காணாமல் போன ரூ.19 லட்சம் மதிப்பிலான 104 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.

கோவை மாவட்டத்தில் செல்போன் திருட்டு மற்றும் காணாமல் போனது தொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், மாவட்ட சைபர் கிரைம்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதில் காணாமல் போன ரூ.19 லட்சம் மதிப்பிலான 104 செல்போன்கள் மீட்கப்பட்டன. இதனை தொடர்ந்து, மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்பி பத்ரிநாராயணன், மீட்கப்பட்ட செல்போன்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

sp

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்பி பத்ரி நாராயணன், தமிழ் நாட்டிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்களிலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களிலும் தண்டனை அளவுக்கு கொண்டுசெல்வதில் கோவை முதலிடத்தில் உள்ளதாகவும், மாவட்டத்தில் கஞ்சா சாக்லேட்டுகள் கடத்தலை தடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.  மேலும், பவானி ஆற்றில் இனி உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாக கூறிய எஸ்பி பத்ரி நாராயணன்,  கஞ்சா பயன்பாட்டை பலரும் இனம், மதம் தாண்டி செய்வதாகவும், எனவே வட மாநிலத்தவர் தான் என கொண்டு செல்ல வேண்டாம் என நினைப்பதாகவும் கூறினார். 

cellphones

கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு கொலை, ஆதாய கொலை,  திருட்டு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதை பொருள் விற்பனை உள்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுப்பட்டதில் இதுவரை 1,550 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பத்ரி நாராயணன் கூறினார்.  மேலும், போதை பொருள் கடத்தல் சட்டத்தின் கீழ் 53 வழக்குகள் பதியப்பட்டு, அதன் தொடர்புடைய 68 பேர் செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ. 27.86 லட்சம் மதிப்புள்ள சுமார் 312.5. கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.