அன்னூரில் சுற்றுலா வேனில் கடத்திய 12 கிலோ கஞ்சா பறிமுதல் - மூவர் கைது!

 
cannabis

கோவை மாவட்டம் அன்னூரில் சுற்றுலா வேனில் கடத்திச்சென்ற 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

கோவை மாவட்டம் தமிழக - கேரள எல்லையான மாங்கரை சுற்றுவட்டார பகுதிகளில்  கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும், கஞ்சா வாங்கிச் செல்ல அன்னூர் பகுதிக்கு சிலர் வர உள்ளதாகவும், அன்னூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் அன்னூர் பேருந்து நிலையம், மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மேட்டுப்பாளையம் சாலை ஜே.ஜே.நகர் பகுதியில் நீண்ட நேரமாக சுற்றுலா வேன் ஒன்று நின்றிருப்பதை கண்ட போலீசார், சந்தேகத்தின் பேரில் அந்த வேனில் இருந்த 3 நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், வேனில் சோதனையிட்டனர். 

arrest

அப்போது, வேனில் இருந்த பையில் பண்டல் பண்டலாக கஞ்சாவை கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கேரளாவை சேர்ந்த சதிஷ்குமார் (34),  மதுரையை சேர்ந்த நல்லசாமி மற்றும் வேன் ஓட்டுநர் தடாகம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார்(33) என்பது தெரிய வந்தது. மேலும், தோட்ட தொழிலாளியான சதீஷ்குமார், தமிழக - கேரள எல்லை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும், இவர் மீது கேரளா மற்றும் தடாகம் காவல் நிலையங்களில் கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. 

மேலும், நல்லசாமியுடன் சேர்ந்து, கஞ்சா வாங்க அன்னூருக்கு வந்தபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதனை அடுத்து, அன்னூர் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய சுற்றுலா வேன் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, கைதான 3 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.