நத்தம் அருகே காரில் கடத்திய 140 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது!

 
dgl

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காரில் கடத்திவந்த ரூ.13 லட்சம் மதிப்பிலான 140 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்திவரப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து, அவரது உத்தரவின் பேரில், மாவட்ட எஸ்.பி., தனிப்படை போலீசார் நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். செந்துறை அருகே சமுத்திரப்பட்டி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனையிட முயன்றனர். 

dgl

ஆனால், ஓட்டுநர் காரை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். இதனை அடுத்து, போலீசார் அந்த காரை துரத்திச்சென்று பிடித்து, சோதனையிட்டனர். அப்போது, காரில் மூட்டைகளில் அடைத்து கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக காரில் இருந்த அஞ்சுகுளிபட்டி பகுதியை சேர்ந்த குணசேகரன்(37) மற்றும் அழகு(35) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் ஆந்திராவிலிருந்து திண்டுக்கல் பகுதிக்கு கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. 

இதனையடுத்து, காரில் 7 மூட்டைகளில் இருந்த சுமார் 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான 140 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், பிடிபட்ட குணசேகரன், அழகு ஆகியோர் நத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காரில் கஞ்சா கடத்தியவர்களை கைதுசெய்த தனிப்படை போலீசாருக்கு, திண்டுக்கல் எஸ்.பி. ஸ்ரீனிவாசன் நேரில் பாராட்டு தெரிவித்தார்.